மக்கள் கோரிய முறை மாற்றத்தை ஏற்படுத்த நுவன் போபகேவை வெற்றிபெறச்செய்ய வேண்டும் – வசந்த முதலிகே

நாட்டின் பொருளாதாரம் மற்றும் அரசியல் செயற்பாடுகளை தலைகீழாக மாற்றும் முறை மாற்றத்தையே மக்கள் கோரி வந்தனர். அந்த முறை மாற்றத்துக்கு ஏற்புடைய வேலைத்திட்டமே மக்கள் போராட்ட கூட்டணியாக நாங்கள் இந்த தேர்தலில் முன்வைத்திருக்கிறோம். அந்த அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த ஜனாதிபதி வேட்பாளர் நுவன் போபகேவை வெற்றிபெறச்செய்ய வேண்டும் என மக்கள் போராட்ட கூட்டணி செயற்பாட்டாளர் வசந்த முதலிகே தெரிவித்தார்.

மக்கள் போராட்ட கூட்டணியின் இறுதி தேர்தல் பிரசாக்கூட்டம் புதன்கிழமை (18) கிரிபத்கொடை நகரில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டின் அரசியல் முறை தொடர்பில் மக்கள் மத்தியில் கடந்த காலங்களில் பாரிய எதிர்ப்பும் விமர்சனங்களும் தெரிவிக்கப்பட்டிருந்தன. என்றாலும் தற்போது தேர்தல் சூடுபிடிப்புக்குள் மக்களின் அந்த எதிர்ப்பை கொள்ளையடிக்க அனைத்து வேட்பாளர்களும் பொய் வாக்குறுதிகளை வழங்கி வருகின்றனர். அந்த வாக்குறுதிகளில் அடங்கி இருப்பது மக்களின் கவலை, கஷ்டங்களை வாக்குகளாக மாற்றும் முயற்சி மாத்திரமாகும். மக்களின் பிரச்சினைகளுக்கு பதிலளிக்க முடியுமான வேலைத்திட்டம் எதுவும் இல்லை.

நாடு எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதாக தெரிவித்துக்கொண்டு இந்த நாட்டு ஆட்சியாளர்கள் கடந்த இரண்டு வருடங்களாக என்ன செய்தார்கள் என்பது எங்களுக்கு தெரியும். நாட்டு மக்களுக்கு உரித்தான சொத்துகள், எண்ணெய் குதங்கள், துறைமுகம், விமான நிலையம், நிலங்கள் என அனைத்தையும் விற்பனை செய்கின்ற நடவடிக்கையையே  செய்தார்கள்.

அதற்கு அப்பால் சென்று சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெற்றுக்கொண்டு, அந்த கடன்கள் மூலம் பாரிய கண்கட்டி வித்தை ஒன்று நாட்டில் ஏற்பட்டுள்ளதாக காட்டினார்கள். ஆனால் நாட்டை விற்பனை செய்தும் கடன் பெற்றுக்கொண்டும் ஏற்பட்ட வித்தை ஒன்றும் இல்லை.

நாட்டில் பிள்ளைகளில் நான்கில் ஒன்று மந்த போஷணை குறைப்பாட்டில் பாதிக்கப்பட்டடிருக்கிறது. சனத்தொகை மதிப்பீடு மற்றும் புள்ளிவிபர திணைக்களத்தின் 2023 ஆம் ஆண்டுக்கமைய சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் விட்டு அலகு கணிப்பீட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதன் பிரகாரம், நாட்டின் கீழ் மட்டத்தில் இருப்பவர்கள் பாரிய கடன் சுமையுடன் அத்தியாவசிய தேவைப்பாடுகள் இழக்கப்பட்டுள்ள நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

நாட்டின் மொத்த குடும்ங்களில் 22 வீதமானவர்கள் கடனாளியாகி இருக்கின்றனர். 65,5 வீதமானவர்களின் குடும்பங்களின் மாத வருமானம் குறைவடைந்துள்ளது. மக்களின் உணவு செலவு கடந்த வருடங்களுக்கு நிகராக 91.1வீதத்தால் அதிகரித்துள்ளது. சுகாதாரம் மற்றும் கல்விச்செலவு தாங்கிக்கொள்ள முடியாத நிலைக்கு அதிகரித்துள்ளது. அன்றாட உணவு வேளைக்கு வழியில்லாது நம்பிக்கை இழந்த நிலையிலேயே மக்கள் இருக்கின்றனர். இதுதான் அரசாங்கம் செய்துள்ளதாக தெரிவிக்கும் பாரிய வித்தை.

அதனால் ரணில் விக்ரமசிங்கவை இந்த தேர்தலில் தோற்கடிக்கவேண்டும். அத்துடன் அரசாங்கத்தின் கொள்கையையும் தோற்கடிக்க வேண்டும். ஏனெனில் வேறு ஒரு வேட்பாளர் இந்த கொள்கையுடன் ஜனாதிபதி பதவிக்கு வருமாக இருந்தால், நாட்டு மக்களின் பிரச்சினை தீரப்போவதில்லை. கடந்த காலங்கள் பூராகவும் நாட்டில் அரசியல் அதிகாரத்தில் இருந்த அனைவரும் ஒரே கொள்கையையே செயற்படுத்தினார்கள். அதுதான் மக்களின் நிவாரணங்களை குறைத்துக்கொண்டு, சர்வதேச நாணய நிதியம். இந்தியா, அமெரிக்காவுக்கு அடிபணிந்த வேலைத்திட்டங்களாகும்.

கடந்த காலங்களில் மக்கள் போராட்டத்தில் முறை மாற்றத்தையே  மக்கள் கோரினார்கள். நாட்டின் பொருளாதாரம் மற்றும் அரசியல் செயற்பாடுகளை தலைகீழாக மாற்றும் முறை மாற்றத்தையே மக்கள் கோரி வந்தனர். அந்த முறை மாற்றத்துக்கு ஏற்புடைய வேலைத்திட்டமே மக்கள் போராட்ட கூட்டணியாக நாங்கள் இந்த தேர்தலில் முன்வைத்திருக்கிறோம். அந்த அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தவே நுவன் போபகே ஜனாதிபதி வேட்பாளராக பாேடடியிடுகிறார். அதனால் மக்களின் எதிர்பார்ப்புக்களை வெற்றிகொள்ள குடை சின்னத்துக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.