மட்டக்களப்பில் ரி.எம்விபி கட்சி உபதலைவர் உட்பட 3 பேரிடம் சிஐடி விசாரணை

வாழைச்சேனையில் பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பதில் தலைவர் ஜெயம் என அழைக்கப்படும் நாகலிங்கம் திரவியம் உட்பட 3 பேரை  இன்று வெள்ளிக்கிழமை (06) சிஐடியினரால் அவரது வீட்டிலிருந்து வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடந்த 2006 டிசம்பர் 15 ம் திகதி  கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வாகனத்தில் பயணித்தார். இதன் போது  அவர் கொழும்பில் வைத்து கடத்தப்பட்டு காணாமல் போனார். இந்த சம்பவம் தொடர்பாக பிள்ளையான் என்றழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தனை கடந்த ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி  கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவினர் மட்டக்களப்பில் உள்ள அவரது காரியாலயத்தில் வைத்து கைது செய்து பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 3 மாதம் தடுப்புக்காவலில் வைத்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணையினையடுத்து மட்டக்களப்பு முதலாவது வாவிக்கரை வீதியில் அமைந்துள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமைக்காரியலயத்தை கடந்த 30 ஆம் கொழும்பில் இருந்து வந்த சிஜடியினர் விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைத்து சுமார் 12 மணித்தியாலம் சோதனை நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்தனர்.

இதன்போது அங்கிருந்து ஒரு சற்றலைற் போன் உட்பட 3 கையடக்க தொலைபேசிகள்,  சாரதி அனுமதிபத்திரம் ஒன்று,  கடவுச் சீட்டு ஒன்று, ஜபாட் ஒன்று, 9 மில்லிமீற்றர் ரக கைதுப்பாக்கி 5 ரவைகள், றிப்பிற்றர் ரக துப்பாக்கியின் 5 வெற்று தோட்டாக்களை மீட்டனர்.

இதனையடுத்து கைப்பற்றப்பட்ட சற்றலைற் போன் தொடர்பாக் ரி.எம்.வி கட்சியின் வாழைச்சேனையை சேர்ந்த மார்கண்  என்ற ழைக்கப்படும் ஜயாத்துரை ரவி மற்றும் அவரின் உதவியாளர் குமரன் ஆகிய இருவரையும் நேற்று வியாழக்கிழமை (5) வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திற்கு சிஜடியினர் வரவழைத்து சுமார் 5 மணித்தியாலம் விசாரணைகளை மேற்கொண்டு பின்னர் அவர்களை விடுவித்தனர்.

இதனை தொடர்ந்து இன்றைய தினம் பிற்பகல் 11.00 மணியளவில் வாழைச்சேனை பேத்தாளையிலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உப தலைவரான ஜெயம் என்பவரது வீட்டை சிஜடியினர் முற்றுகையிட்டு அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்று வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் வைத்து சுமார் 4 மணித்தியாலம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை விடுவித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.