மண்டை தீவு செம்பாட்டுத்தோட்ட தோமையார் தேவாலய மனித புதைகுழி

மண்டைதீவு செம்பாட்டுத்தோட்டம் தோமையார் தேவாலயப்பகுதியில் உள்ள மனிதப் புதைகுழி தொடர்பில் ஈ.பி.டி.பி.யின் செயலாளரும் முன்னாள்  அமைச்சரும் இராணுவ ஒட்டுக் குழுத் தலைவருமாக இருந்தவரான டக்ளஸ் தேவானந்தாவிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என  இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக்குழுத் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான  சிவஞானம் சிறீதரன் சபையில் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (17) நடைபெற்ற அமர்வின் போது  மண்டைதீவு செம்பாட்டுத் தோட்டம், புனித தோமையார் ஆலயத்தின் அருகாமை, திருக்கேதீஸ்வரம், முல்லைத்தீவு குமுழுமுனை, கொக்குத்தொடுவாய்  யாழ்ப்பாணம் செம்மணி சிந்துப்பாத்தி  மனிதப் புதைகுழிகள் தொடர்பில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்சன நாணயக்காரவின் கவனத்திற்கு  கொண்டு வந்து கேள்வி எழுப்புகையில்  மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

மண்டைதீவு செம்பாட்டுத்தோட்டம் தோமையார் தேவாலயப்பகுதியில் உள்ள மனிதப் புதைகுழியில், 1990களில் வேலணை, மண்கும்பான், அல்லைப்பிட்டி, மண்டைதீவுப் பகுதிகளில் இருந்து அழைத்துவரப்பட்ட சிறுவர்களும் இளைஞர்களுமே புதைக்கப்பட்டார்கள் என வடக்கு மற்றும்  கிழக்கு மனித உரிமை அமைப்புகள் குறிப்பிடுகின்றன.

3ஆம்  வட்டாரம், மண்டைதீவைச் சேர்ந்த சூசைதாஸ் யேசுரட்ணம் தர்மராணி என்ற தாயார், தனது இரு பிள்ளைகள் உட்பட்ட 84 பேர் மண்டைதீவில் காணாமலாக்கப்பட்டுள்ளதாகவும்,அதற்கான நீதியைப் பெற்றுத்தருமாறும் 2025.04.30 ஆம் திகதி ஜனாதிபதிக்கு ஒரு கடிதத்தை அனுப்பி, அதன் பிரதியை எனக்கும் கிடைக்கச் செய்துள்ளார்.

இப்பகுதியில் படுகொலை செய்யப்பட்டவர்களின் புகைப்படங்களுடன் வெளிவந்த அறிக்கைகள் உள்ளன.மண்கும்பான். அல்லைப்பிட்டி, மண்டைதீவுப் பகுதிகளில் இருந்து அழைத்துவரப்பட்ட சிறுவர்களும், இளைஞர்களுமே படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டார்கள்.

இவர்களை இராணுவத்தினர்  அழைத்து சென்ற போது பெற்றோர், உறவினர்கள் அப்போது தீவுப்பகுதியில் இராணுவ ஒட்டுக்குழுவின் தலைவராகவிருந்த டக்ளஸ் தேவானந்தாவிடம்  ஓடிச்சென்று அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மன்றாடியபோது இராணுவத்தினர் விசாரித்து விட்டு விடுவிப்பார்கள் என டக்ளஸ் கூறியுள்ளார்.

ஆனால் அவர்கள் எவரும் விடுவிக்கப்படாது படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டார்கள்.எனவே மண்டைதீவு செம்பாட்டுத்தோட்டம் தோமையார் தேவாலயப்பகுதியில் உள்ள மனிதப் புதைகுழி தொடர்பில் ஈ.பி.டி.பி.யின் செயலாளரும் முன்னாள்  அமைச்சரும் இராணுவ ஒட்டுக் குழுத் தலைவருமாக இருந்தவரான டக்ளஸ் தேவானந்தாவிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார்.