மனித எலும்புக்கூடு : நீதிமன்ற உத்தரவின் கீழ் அகழ்வுப்பணிகள் ஆரம்பம்

கொழும்பு துறைமுகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அண்மையில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் மனித எலும்புக்கூட்டின் பாகங்கள் கண்டறியப்பட்ட நிலையில், கொழும்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதியின் உத்தரவுக்கு அமைவாக அதனைத் தோண்டும் பணிகள் இன்று வியாழக்கிழமை (05) ஆரம்பிக்கப்பட்டன.

கொழும்பு துறைமுக நெடுஞ்சாலை விரிவாக்கத் திட்டத்துக்காகக் கடந்த ஜூலை மாதம் 14 ஆம் திகதி துறைமுகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அண்மையில் அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்த வேளையில், அங்குத் தலை வேறாகவும், முண்டம் வேறாகவும் மனித எலும்புக்கூடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

அதனையடுத்து அப்பணிகள் உடனடியாக நிறுத்தப்பட்ட நிலையில், அப்பகுதியை அகழ்வதற்கு அவசியமான நிதி நீதியமைச்சினால் ஒதுக்கீடு செய்யப்பட்டதுடன், அகழ்வுப்பணிகளை இன்றைய தினம் (5) முதல் ஆரம்பிக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்ற நேற்று (04) உத்தரவு பிறப்பித்தார்.

அதற்கமைய இன்றைய தினம் (5) காலை 8.30 மணிக்குக் கொழும்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி பண்டார தலைமையில் தொல்லியல் நிபுணர் ராஜ் சோமதேவா, கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி ஹேவகே, காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் சட்டத்தரணியுமான ஜெ.தற்பரன், பொலிஸ் உயரதிகாரிகள், பொதுமக்கள் சார்பில் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் மற்றும் மனித உரிமைகள், அபிவிருத்திக்கான நிலையம் ஆகியவற்றின் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் அப்பகுதியை அகழும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

அதன்போது ஏற்கனவே கண்டறியப்பட்ட மனித எலும்புக்கூட்டின் எச்சங்கள் முழுமையாகத் திரட்டப்பட்டு, அப்பகுதி சுத்தம் செய்யப்பட்டதுடன் நேற்றைய அகழ்வுப்பணி நிறைவடைந்தது. இந்நிலையில் இன்றைய தினம் (6) அப்பகுதியில் மீண்டும் அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இது இவ்வாறிருக்கப் பல வருடங்களுக்கு முன்னர் அப்பகுதியில் வைத்தியசாலை ஒன்றும், பாதுகாப்புப்படையினருக்குச் சொந்தமான முகாம் ஒன்றும் (காலப்பகுதி சரிவர உறுதிப்படுத்தப்படவில்லை) இருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.