மலையக, ஈழத்தமிழ் மக்களுக்கு நியாயம்தான் வேண்டும்!

வெற்றி பெற்று பதவி ஏற்றுள்ள  நண்பர் ஜனாதிபதி அனுர குமார திசாநாயகவுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள். அரசியல் குரோதங்கள், கட்சி வேறுபாடுகள் இன்றி பொறுப்புள்ள ஐக்கிய மக்கள் கூட்டணியாக, தமிழ் முற்போக்கு கூட்டணியாக நாம் செயற்படுவோம். நீங்கள் உறுதி அளித்த, உயிர்த்த ஞாயிறு படுகொலை சூத்திரதாரிகளை கண்டறிந்து தண்டனை வழங்குவது, ஊழல் ஒழிப்பு, வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள நாட்டின் சொத்துகளை மீட்பது, மத்திய வங்கி பிணை முறி கொள்ளையரை தண்டிப்பது, சிவராம், நடேசன், எகனிலியகொட, லசந்த உட்பட ஊடகவியலாளர் கொலைதாரிகளை கண்டறிந்து தண்டனை வழங்குவது ஆகிய அனைத்து நடவடிக்கைகளுக்கும் நாம் இரு கரங்களை உயர்த்தி ஆதரவு வழங்குவோம்.

ஜனாதிபதி அனுர சகோதரரே, தமிழ் மக்களுக்கு, குறிப்பாக மலையக தமிழருக்கும், ஈழத்தமிழருக்கும் இனிமேல் இந்நாட்டில் அனுதாபம் வேண்டாம். எமக்கு நியாயம்தான் வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், இன்று ஐக்கிய மக்கள் கூட்டணி மத்திய நிலையத்தில் நடை பெற்ற ஊடக சந்திப்பில் கூறினார்.

ரஞ்சித் மத்தும்பண்டார, டல்லஸ் அலஹபெரும, சம்பிக்க ரணவக்க, தயாசிறி ஜயசேகர, கபீர் ஹசிம், நிசாம் காரியப்பர் ஆகியோர் கலந்து கொண்ட ஊடக சந்திப்பில்  மனோ கணேசன் மேலும் கூறியதாவது;

மலையக தமிழர்:

இந்நாட்டில் 200 வருடங்கள் வாழ்ந்து விட்ட மலையக பெருந்தோட்ட மக்களுக்கு ஒரு அங்குலம் நிலம்கூட இல்லை என அனுதாபப்பட்டு நீங்கள் தேர்தலுக்கு முன் பேசிய ஊடக காணொளியை கண்டேன். மலையக மக்களுக்கு வீடு கட்டி கொள்ளவும், வாழ்வாதார தேவைகளுக்காகவும் காணி வழங்குங்கள். காணி உரிமை வழங்கி அவர்களை இலங்கை தேசிய நீரோட்டத்துக்குள் கொண்டு வாருங்கள். உங்கள் “சிஸ்டம் சேஞ்” என்ற முறை மாற்றத்தை பெருந்தோட்ட துறையில் ஆரம்பித்து, நமது மக்களை  பெருந்தோட்ட தொழிலில் பங்காளி ஆக்குங்கள்.

ஈழத்தமிழர்:

வடக்கு கிழக்கு ஈழத்தமிழ் சகோதரர்கள் பற்றியும் நீங்களும், உங்கள் கட்சியாளர்களும் அனுதாபப்பட்டு பேசி உள்ளதை கண்ணுற்றேன். ஆகவே அரசியல் கைதிகளை விடுவியுங்கள். இப்போதுதான் யுத்தம் இல்லையே? ஆகவே விடுக்கப்படாத அனைத்து தனியார் காணிகளையும் உடன் விடுவியுங்கள். காணாமல் போனார் பற்றி பேசி உள்ளீர்கள். அவர்களின் குடும்பத்தவருக்கு நியாயம் வழங்குங்கள். உடனடியாக அங்கே மாகாணசபை தேர்தல்களை நடத்துங்கள்.  மாகாணசபை தேர்தல்களை நடத்தும்படி ரணில் விக்கிரமசிங்கவிடம் கேட்டு, கேட்டு நான் அலுத்தே போய் விட்டேன்.

ஆகவே, ஜனாதிபதி அனுர சகோதரரே, தமிழ் மக்களுக்கு, குறிப்பாக மலையக தமிழருக்கும், ஈழத்தமிழருக்கும் இனிமேல் இந்நாட்டில் அனுதாபம் வேண்டாம். எமக்கு நியாயம்தான் வேண்டும்

வவுனியா மிரட்டல் சம்பவம்:

நேற்று முதல் நாள் நடைபெற்ற சர்வதேச  குழந்தைகள் தினத்தன்று, வவுனியாவில் ஜனநாயக ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்த வலிந்து காணாமல் போன உறவு தாய்மார்களை, “தான் அனுரவின் ஆள்” என்று கூறி ஒரு காடையர் மிரட்டி உள்ளார். “இனிமேல் இத்தகைய ஆர்ப்பாட்டங்களை செய்ய விட மாட்டோம்” எனவும் கூறி உள்ளார். இதை கூறி நான் அரசியல் நோக்கில் உங்களை ஒருபோதும் குற்றம் சாட்டவில்லை. ஆனால், உங்கள் பெயரை பகிரங்கமாக பயன்படுத்தி, பெண்களை மிரட்டி, பயமுறுத்தியுள்ள இந்த நபரை உனடியாக கைது செய்யுங்கள்.

சட்ட திருத்தங்கள்:

திருடர்களை பிடிக்க, கைது செய்ய,  புதிய  சட்டங்கள் கொண்டு வர, இருக்கும் சட்டங்களை திருத்த, வெளிநாட்டுக்கு தப்பி ஓடியவர்களை மீண்டும் இந்நாட்டுக்கு கொண்டு வர, அவ்வவ் நாடுகளுடன் உடன்படிக்கைகள் செய்ய நாம் உங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளோம்.

ஜனாதிபதி முறைமை:

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்போம். பாராளுமன்றத்துக்கு பதில் சொல்லும் நிறைவேற்று ஜனாதிபதியா அல்லது முழுமையாக இதை ஒழிப்பதா என  அது பற்றி அமர்ந்து பேசுவோம்.  அதற்கும் முழு அதரவு தருவோம்.

சர்வதேச நாணய நிதி:

இன்று உங்கள் ஆலோசகர்கள் இருவரும், மத்திய வங்கி ஆளுனரும், நிதி அமைச்சு செயலாளரும் சர்வதேச நாணய நிதியுடன் பேச போகிறார்கள். நல்ல விடயம். நாட்டின் நிதி நிலைமை உடைந்து நொறுங்கிய அன்று, நாம்தான் சர்வதேச நாணய நிதியிடம் செல்ல வேண்டும் என்று முதன் முதலில் பாராளுமன்றத்தில் கூறினோம். அப்போது பிற்காலத்தில் ரணிலுடன் இருந்த மொட்டு கட்சியினர் எம்மை எதிர்த்து கூச்சல் எழுப்பினார்கள். அது உங்களுக்கு தெரியும்.  இன்று சர்வதேச நாணய நிதியுடன் நீங்கள் பேசுகிறீர்கள். வரவேற்கிறோம். இது தொடர்பில் உங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவும் நாம் தயாராக உள்ளோம்.

பாராளுமன்ற தேர்தல்:  

வாக்கு எண்ணிகையில் அதிகம் பெற்றதால் நண்பர் அனுர குமார திசாநாயக்க ஜனாதிபதி ஆகியுள்ளார். இரண்டாம் இடத்துக்கு சஜித் வந்துள்ளார். ஆனால் நண்பர் அனுர குமார திசாநாயக்க 50 விகிதம் வாக்குகள் பெறவில்லை. ஆகவேதான் மூன்றாம் இடத்தை பெற்றவர் முதல் அனைவரது வாக்கு சீட்டுகளிலும் இருந்த இரண்டாம், மூன்றாம் வாக்குகள் எண்ண பட்டன.

ஆகவே மூன்றாம் இடம் பெற்ற சிலிண்டருக்கு, இனி அரசியல் ரீதியாக இடம் இல்லை. எதிர் கட்சியான சிலின்டருக்கு வாக்களித்தவர்கள், எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில்  எமக்கு வாக்களிக்க வேண்டும். நாம் பொறுப்புள்ள பாராளுமன்ற அரசாங்கமாக செயற்படுவோம். நாடு இன்னமும் வாங்குரோத்து நிலையில்தான் இருக்கிறது. மொத்த கடன் தொகை கூடி உள்ளது. மொத்த வட்டி தொகையும் கூடி உள்ளது. ஆகவே நாம் அனைவரும் சேர்ந்து நாட்டை  கட்டி எழுப்ப வேண்டும். நாம் பொறுப்புடன் கூட்டாக நாட்டை கட்டி எழுப்புவோம்.