இந்நிகழ்வில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம், மற்றும் மலையக மக்கள் முன்னணியின் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி ராதாகிருஷ்ணன் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் முக்கிய பிரதிநிதிகள் தோட்ட தலைவர்கள் தலைவிமார்கள் தேசிய சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் உரையாற்றுகையில் மலையக சாசனம் தொடர்பான விளக்கத்தையும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் எதிர்கால திட்டங்கள் பற்றியும் மக்களுக்கு தெளிவுபடுத்தினார்.
அதனைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவிக்கையில், பொதுவாக தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பாக கடந்த தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் வெற்றியீட்டிய நிலையில் மக்களுக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி என்ற பெயரில் வாக்கு கேட்கும் போது அவர்கள் வாக்களிக்க வேண்டும் என்று மக்களுக்கு தெரியும்.
ஆனால் ஒரு சிலர் தமிழ் முற்போக்கு கூட்டணி ஊடாக வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவான பின்னர் தற்பொழுது அவர்களின் சுயநலத்திற்காக பிரிந்து சென்றுள்ளனர்.
வருகின்ற தேர்தலில் இது தொடர்பாக மக்கள் அவர்களுக்கு தக்க பாடத்தினை புகட்டுவார்கள். அதேவேளை இன்று வெளியிடப்பட்டிருக்கின்ற மலையக சாசனம் என்பது மலையக மக்களுடைய தேவை அறிந்து நல்ல எண்ணத்துடன் உருவாக்கப்பட்ட ஒரு சாசனம் ஆகும்.
இது தானே கட்சி சார்பாக உருவாக்கியது அல்ல. சிவில் அமைப்புகள் பேராசிரியர்கள் நலன் விரும்பிகள் மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த சாசனத்தை உருவாக்கினோம். அதன் ஊடாக சஜித் பிரேமதாச இதற்கு கைச்சாத்திட்டுள்ளார். தற்பொழுது ரணில் விக்கிரமசிங்கவுடன் இருக்கக்கூடிய 92 பேரும் இந்த நாட்டை சூறையாடியவர்கள்.
அவர்களை வைத்துக் கொண்டு விக்கிரமசிங்க தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் நாடு எந்த நிலைமைக்கு செல்லும் என தற்போது மக்களுக்கு தெரியும். ஆனால் நாங்கள் சஜித் பிரேமதாசவிடம் எமது கோரிக்கைகளை கூறி அதனை அவர் ஏற்றுக் கொண்டதன் பிற்பாடு நாங்கள் சஜித் பிரேமதாச உடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டோம்.
அதேவேளை இந்த மலையக சாசனமானது நுவரெலியாவில் குறிப்பாக மலையகத்தின் தலைநகரமாக இருக்கக்கூடிய நுவரெலியா நகரில் ஏற்பாடு செய்ததற்கு காரணம் பெரும்பாலான நமது தமிழர்கள் வசியக்கூடிய இடமாக இருப்பதால் இந்த மலையக சாசன புரிந்து உணர்வு ஒப்பந்தத்தை நுவரெலியாவில் வெளியீட்டோம் என கருத்து தெரிவித்தார்.