முகநூல் ஆதரவுக்குழு என்ற போர்வையில் தனிப்பட்ட தகவல்களைத் திருடும் மோசடி கும்பல்!

முகநூல் ஆதரவுக்குழு என்ற போர்வையில் தனி நபர்களின் தனிப்பட்ட தகவல்களைத் திருடும் மோசடி கும்பல் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு இலங்கை கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் இலங்கை கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவின் சிரேஷ்ட தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுகல தெரிவிக்கையில்,

இவ்வாறான மோசடிகள் தொடர்பில் கடந்த சில நாட்களாக பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று வரும் நிலையில் நேற்று (12) திங்கட்கிழமை மாத்திரம் 8 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

முகநூல் ஆதரவுக் குழு என்ற பெயரில் வாட்ஸ்அப் மற்றும் கையடத்தொலைபேசிகளுக்கு குறுஞ்செய்திகளை அனுப்புவதன் மூலம் இந்த மோசடிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

முகநூல் கணக்குகளின் உரிமையாளர்களை இலக்கு வைத்து இந்த மோசடிகள் இடம்பெறுகின்றன.

இதனால், உங்களது முகநூல் கணக்குகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டாலோ அல்லது செயலிழக்கச் செய்யப்பட்டாலோ முகநூல் ஆதரவுக்குழு என்ற பெயரில் உங்களது வாட்ஸ்அப் அல்லது கையடக்கத்தொலைபேசிகளுக்கு வரும் குறுஞ்செய்திகள் தொடர்பில் அவதானமாக இருங்கள்.

இவ்வாறான குறுஞ்செய்திகளுக்குப் பதிலளிப்பதன் மூலம் குறித்த மோசடி கும்பலுக்கு எங்களது தனிப்பட்ட தகவல்களைத் திருட முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.