முல்லைத்தீவு – செஞ்சோலை படுகொலை : 18ஆவது ஆண்டு நினைவேந்தல்

முல்லைத்தீவு – செஞ்சோலை வளாகத்தில்  ஸ்ரீலங்கா இராணுவ விமானப்படையினரின் வான் தாக்குதலில் உயிரிழந்த  மாணவர்களுக்கான நினைவேந்தல் இன்றைய தினம் (14) அனுஷ்டிக்கப்பட்டது.

முல்லைத்தீவு – வள்ளிபுனம், இடைக்கட்டு பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை வளாகத்தில் பயிற்சிக்காக சென்றிருந்த மாணவர்கள் மீது இலங்கை விமானப்படை நடத்திய தாக்குதலில் உயிரிழந்த பாடசாலை மாணவர்கள் 53 பேர் மற்றும் பணியாளர்கள் 4 பேரினதும் 18ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வான் தாக்குதல் இடம்பெற்ற இடத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

2006.08.14 அன்று வள்ளிபுனம் – இடைக்கட்டு பகுதியில் உள்ள செஞ்சோலை வளாகத்தில் விமானத் தாக்குதல் இடம்பெற்ற நேரத்தில்   இன்றைய தினம் நினைவேந்தல்  உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக சுடரேற்றி, அக வணக்கம் செலுத்தி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த அஞ்சலி  நிகழ்வில் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், முன்னாள் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உறுப்பினர் குகன், இளைஞர்கள், பொதுமக்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும்  கலந்துகொண்டனர்.