யாழில் மோட்டார் சைக்கிளில் திருடிய குற்றத்தில் கைதான இளைஞனுக்கு விளக்கமறியல் !

யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்றினை திருடி தனது வீட்டில் மறைந்து வைத்திருந்த இளைஞனை விளக்க மறியலில் வைக்குமாறு , நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மீசாலை கிழக்கு பகுதியை சேர்ந்த நபர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் அண்மையில் திருடப்பட்டிருந்தது. அது தொடர்பில் உரிமையாளரால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த வேளை, மோட்டார் சைக்கிள் திருட்டு இடம்பெற்ற பகுதியில் இருந்து சுமார் 02 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள அல்லாரை பகுதியில் உள்ள வீடொன்றில் மோட்டார் சைக்கிள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

தகவலின் பிரகாரம் குறித்த வீட்டிற்கு விரைந்த பொலிஸார் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை மீட்டதுடன் , மோட்டார் சைக்கிளை திருடிய குற்றத்தில் வீட்டில் இருந்த இளைஞனையும் கைது செய்தனர்.

விசாரணைகளின் பின்னர் , கைது செய்யப்பட்ட இளைஞனை சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை சந்தேகநபரை விளக்க மறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.