ரணில் – மஹிந்த இன்று விசேட சந்திப்பு

சிறிலங்கா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அந்த கட்சியின் ஸதாபகர் பஷில் ராஜபக்ஷ, தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ மற்றும் செயலாளர் சாகர காரியவசம் ஆகியோருக்கு இடையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (28) விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் பொதுஜன பெரமுனவின் தீர்மானம் நாளை திங்கட்கிழமை (29) வெளிப்படுத்தப்பட உள்ள நிலையில் இந்த இருதரப்பு சந்திப்பு இடம்பெறுகின்றது.

2024ஆம் ஆண்டின் ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், ரணில் விக்கிரமசிங்க சுயாதீன வேட்பாளராக போட்டியிடுவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார். ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 80 பேர் உறுதியளித்துள்ள நிலையில், மேலும் சிலர் மாற்று வேட்பாளர் ஒருவரை களமிரக்குவதற்கு ஆதரவளித்து வருகின்றனர்.

ஜனாதிபதி வேட்பாளர் குறித்து நீண்ட கருத்து வேறுபாடுகளுக்கு பின்னர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க வேண்டுமாயின் சில நிபந்தனைகளை பொதுஜன பெரமுன முன்வைத்துள்ளது. அதாவது, புதிய பொதுக்கூட்டணியில் போட்டியிடுவதாயின், அடுத்து வரக்கூடிய பாராளுமன்ற தேர்தல், மாகாண சபை தேர்தல் மற்றும் உள்ளுராட்சி மன்ற தேர்தல் ஆகியவற்றில் 50 தொடக்கம் 60 வீதம் வரையிலான வேட்பாளர் ஒதுக்கீடு பொதுஜன பெரமுனவுக்கு வழங்கப்பட வேண்டும். அத்துடன் பிரதமர் பதவியும் வழங்கப்பட வேண்டும் என்பது ஆளும் பொதுஜன பெரமுவின் கோரிக்கையாக உள்ளது.

இந்த விடயங்களை மையப்படுத்தி கடந்த 3 வாரங்களாக இடம்பெற்ற சந்திப்புகள் தோல்வியடைந்த நிலையில், இறுதியாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் ஷங்கிரில்லா ஹோட்டலில் இடம்பெற்ற சந்திப்பின் போது பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக்க பெரேராவை முன்னிறுத்த கட்சி உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக நாமல் ராஜபக்ஷ தெரிவித்திருந்தார். மறுபுறம் பொதுஜன பெரமுனவின் 80 பாராளுமன்ற உறுப்பினர்கள் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று  நேரடியாகவே கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கு கடுமையான எதிர்ப்பினை தெரிவித்துள்ள நாமல் ராஜபக்ஷ கட்சி தலைமைத்துவத்தின் தீர்மானத்திற்கு ஏகோபித்த ஆதரவு வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இவ்வாறானதொரு நிலையிலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான தீர்க்கமான சந்திப்பு இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பின் பின்னரே ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதா ? அல்லது தம்மிக பெரேராவை போட்டியிட வைப்பதா என்ற தீர்மானத்தை,  பொதுஜன பெரமுன அறிவிக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.