ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் தமது அரசாங்கம் ஆட்சியமைத்தால் கிழக்கிற்கு மத ரீதியான ஆளுநர் ஒருவரைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் அந்த அரசாங்கம் எவ்வாறானதாக இருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடியும் என்று நீர் வழங்கல் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
நாமும் ஜனாதிபதியும் 100 நாள் வேலைத்திட்டத்துக்கமைய செயற்பட்டு வருகின்றோம். எனவே புதிதாக ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்கு ஒன்றும் இல்லை. 18ஆம் திகதி கொட்டகலையில் எமது தேசிய சபை கூடி ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பதைத் தீர்மானிக்கும்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம், தான் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாகவும் அதற்கமைய அடுத்து தமது அரசாங்கம் ஆட்சியமைத்தால் கிழக்கில் மத ரீதியாக ஒரு ஆளுனரைப் பெற்றுக் கொள்ளலாம் எனக் குறிப்பிட்டுள்ளார். மத ரீதியாக ஒரு அமைச்சர் கிடைப்பார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
எமது அரசாங்கத்தில் நாம் இலங்கையர் என்ற ரீதிலேயே சிந்திக்கின்றோம். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமிழ், சிங்களம், முஸ்லிம் என்ற பாகுபாடு எம்மிடம் இல்லை. இலங்கையராக நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதே எமது நோக்கமாகும். ஆனால் இவர்கள் குறிப்பிடும் விடயங்களை அடிப்படையாகக் கொண்டு அவர்களது அரசாங்கம் எவ்வாறானதாக இருக்கும் என்பதை கணிப்பிட முடிகிறது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தோல்விடைவார் என்றும் அவருக்கு வெற்றி பெறத் தெரியாது என்றும் சிலர் கூறுகின்றனர். மத மற்றும் இன ரீதியான தீமானங்களை எடுப்பவர்கள் ரணில் விக்கிரமசிங்கவை செயற்பட இடமளிக்கவில்லை. தற்போதுள்ள எதிரணியினருடம் நாம் இருந்தால் அனைவரும் புத்தர். அவ்வாறில்லை என்றால் அனைவரும் கல்வர் என்ற நிலைப்பாட்டிலேயே அவர்கள் உள்ளனர் என்றார்.