வடிவேல் சுரேஷ், ஜீவன் தொண்டமான் ரணிலுடன் விசேட சந்திப்பு

சிறிலங்கா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு நீர் வழங்கல் அமைச்சர் ஜீவன் தொண்டமான், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் வடிவேல் ஆகியோருக்கிடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன உள்ளிட்ட முக்கியஸ்தர்களின் பங்கேற்புடன் ஜனாதிபதி செயலகத்தில் திங்கட்கிழமை (12) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன் போது பெருந்தோட்ட மக்களின் சம்பள விவகாரம், காணி உரிமை மற்றும் பெருந்தோட்ட உதவி ஆசிரியர் நியமனம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

அதற்கமைய பெருந்தோட்டங்களை கிராமங்களாக்குவதற்கான திட்டம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதன் போது, பெருந்தோட்ட கிராமங்களுக்கு முன்னர் நல்லாட்சி அரசாங்கத்தில் வாக்குறுதியளிக்கப்பட்டவாறு 7 பேர்ச் காணி மற்றும் காணி உரிமத்தை வழங்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தியதாக வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

மேலும் பெருந்தோட்ட உதவி ஆசிரியர் நியமனம் தொடர்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், 17ஆம் திகதி அதற்கான போட்டிப் பரீட்சை இடம்பெறவிருந்த நிலையில் நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளமை தொடர்பிலும் ஜனாதிபதிக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இவ்விடயத்தில் தான் தலையிட்டு வழக்கினை மீளப் பெறச் செய்வதாக ஜனாதிபதி உறுதியளித்ததாக வடிவேல் சுரேஷ் மேலும் தெரிவித்தார்.