வட, கிழக்கில் இந்தியாவுடன் எமக்கு எவ்வித போட்டியுமில்லை

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இந்தியாவுடன் தமக்கு எந்தவொரு போட்டியும் இல்லை என தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களிடத்தில் தெரிவித்திருக்கும் சீனத்தூதுவர் சி சென்ஹொங் இந்தியாவுடன் மிகநெருக்கமாகப் பணியாற்றுவதற்கான காரணத்தைக் கேட்டறிந்திருக்கிறார்.

இலங்கைக்கான சீனத்தூதுவர் சி சென்ஹொங் மற்றும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியனுக்கும் இடையிலான சந்திப்பொன்று திங்கட்கிழமை (12) கொழும்பிலுள்ள சீனத்தூதரகத்தில் நடைபெற்றது.

நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், சமகால அரசியல் நிலைவரம் மற்றும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடும் நோக்கிலேயே சீனத்தூதரகத்தினால் இச்சந்திப்புக்கு அழைப்புவிடுக்கப்பட்டிருந்தது.

அதன்படி எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிடவுள்ள பிரதான வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பு குறித்தும், தமிழ்மக்கள் சார்பில் களமிறக்கப்பட்டிருக்கும் பொதுவேட்பாளர் தொடர்பான நிலைப்பாடு குறித்தும் சீனத்தூதுவர் சி சென்ஹொங் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த தமிழ் பிரதிநிதிகள், தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பில் தாம் கொண்டிருக்கும் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினர். அதேவேளை ஜனாதிபதித்தேர்தலில் களமிறங்கவுள்ள பிரதான வேட்பாளர்கள் மூவரும் தாம் வெற்றியீட்டினால் தமிழ் மக்களுக்கு வழங்கவிருக்கும் தீர்வு குறித்து பெரும்பாலும் ஒரேவிதமான கருத்துக்களையே வெளியிட்டிருக்கிறார்கள் எனவும், ஆகவே சமஷ்டி அடிப்படையிலான தீர்வை வழங்க முன்வரும் வேட்பாளரை ஆதரிப்பது குறித்து ஆராயலாம் எனத் தாம் தீர்மானித்திருப்பதாகவும் அவர்கள் எடுத்துரைத்தனர்.

அதனை செவிமடுத்த சீனத்தூதுவர், தாம் வட, கிழக்கு தமிழ்மக்களுடன் நெருங்கிய தொடர்பைப்பேண விரும்புகின்ற போதிலும், தாம் சிங்கள மக்களுக்கு ஆதரவானவர்கள் என்பது உள்ளடங்கலாக தம்மைப் பற்றிய பல்வேறு தவறான கருத்துக்களும், புரிதல்களும் தமிழர்கள் மத்தியில் நிலவுவதாகக் கவலை வெளியிட்டார்.

அத்தோடு அண்மையில் தாம் வடமாகாணத்தைச் சேர்ந்த மக்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட உலர் உணவுப்பொருட்களை வழங்கியமையானது எந்தவொரு அரசியல் நலனையும் எதிர்பார்த்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை அல்ல எனவும், மாறாக அம்மக்கள் மீதான உண்மையான அக்கறையின் நிமித்தமே அந்நடவடிக்கைகயை முன்னெடுத்ததாகவும் அவர் விளக்கமளித்தார்.

அதனைத் தாமும் வரவேற்பதாகத் தெரிவித்த சுமந்திரன் மற்றும் சாணக்கியன், சகல தரப்பினருடனும் இணைந்து நட்புறவுடன் பணியாற்றுவதற்கே தாம் விரும்புவதாகக் குறிப்பிட்டனர்.

அதற்குப் பதிலளித்த சீனத்தூதுவர் ‘நீங்கள் இந்தியாவுடன் அல்லவா அதிக நெருக்கத்தைப் பேணுகின்றீர்கள்?’ என வினவினார். அதனை ஒப்புக்கொண்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள், தம்மைப் பொறுத்தமட்டில் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு விவகாரமே மிகப்பிரதானமானது எனவும், அவ்விடயத்தில் இந்தியா குறிப்பிடத்தக்களவு கரிசனை காண்பிப்பதனால் தமிழ்மக்கள் இந்தியாவுடன் நெருக்கமான தொடர்பைப் பேணுவதாகத் தெரிவித்தனர்.

அதேவேளை இங்கு கருத்து வெளியிட்ட சீனத்தூதுவர் சி சென்ஹொங், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமக்கு இந்தியாவுடன் எவ்வித போட்டியும் இல்லை எனவும், இலங்கையின் இறையாண்மைக்குக் குந்தகம் விளைவிக்கக்கூடிய எந்தவொரு நடவடிக்கையிலும் சீனா ஈடுபடாது எனவும் உறுதியளித்தார்.