வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமம் புனிதஸ்தலத்தில் சமய நிகழ்வுகளில் சாகல ரத்நாயக்க

வரலாற்றுச் சிறப்பு மிக்க கதிர்காமம் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் இறுதிநாள் எசல மஹா பெரஹரா ஞாயிற்றுக்கிழமை (21) வீதி உலா வந்தது.

ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியும், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான சாகல ரத்நாயக்க ஞாயிற்றுக்கிழமை (21) பிற்பகல் கதிர்காமம் ஆலயத்திற்குச் சென்று சமய வழிபாடுகளில் ஈடுபட்டு ஆசிர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காம விகாரைக்குச் சென்ற சாகல ரத்நாயக்க முதலில் கிரிவெஹர விகாரை பீடாதிபதி வண. கொபவக்க தம்மிந்த நாயக்க தேரைச் சந்தித்து ஆசிகளைப் பெற்றுக்கொண்டார்.

பின்னர் விகாரையில் நடைபெற்ற சமய நிகழ்வுகளில் கலந்து கொண்டு கதிர்காமம் சமன் மகா தேவாலயம் உள்ளிட்ட தேவாலயங்களுக்குச் சென்று ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார்.

கதிர்காம ஆலயத்தின் வருடாந்த எசல மஹா பெரஹரா உற்சவத்தின் இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை (21) கிரிவெஹர விகாரையின் விகாராதிபதி கொபவக தம்மிந்த தேரரின் அனுசாசனைக்கு அமைய சிங்கராஜா ஹஸ்திராஜா யானையின் மீது புனித கலசம், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சாகல ரத்நாயக்க ஆகியோரின் தலைமையில் வைக்கப்பட்டது.

கதிர்காமம் உற்சவத்திற்காக வந்திருந்த பக்தர்களுடனும் சாகல ரத்நாயக்க சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டார் .

இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ, கதிர்காமம் மஹா தேவாலய பஸ்நாயக்க நிலமே டிஷான் குணசேகர மற்றும் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.