வாகன இறக்குமதியால் நாட்டில் வெளிநாட்டு நாணய ஒதுக்கம் குறைவடையும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எனினும் அதற்காக வாகனங்களை இறக்குமதி செய்யாமல் இருக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கண்டியில் நேற்று (10) வர்த்தகத்துறையினருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.
நாட்டுக்கு வாகனங்கள் இறக்குமதி செய்ய ஆரம்பிக்கப்பட்டால், வெளிநாட்டு ஒதுக்கங்களும் குறைவடையும். தற்போது நாட்டில் சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்த பொருளாதார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அவர்களுடன் 6 மாதங்களுக்கு ஒருமுறை பேச்சுவார்த்தை நடத்துகிறோம். அவர்களுடன் ஒத்துப் போகின்ற விடயங்களும் உள்ளன, ஒத்துப் போக முடியாத விடயங்களும் உள்ளன.
அரசாங்கத்துக்கு அதிகமான வருமானம் கிடைக்கின்ற விடயமாக, வாகனங்கள் இறக்குமதி செய்யப்படும் போது விதிக்கப்படுகின்ற வரிகளே இருக்கின்றன.
அத்துடன் வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டால் உள்நாட்டு உற்பத்திகள் அதிகரிக்கும்.
எனவே வாகனங்கள் இறக்குமதி செய்யப்படும் போது வெளிநாட்டு ஒதுக்கங்கள் குறைவடைந்து, பின்னர் அதிகரிக்க வேண்டும் என்ற நிலையிலேயே நாம் இருக்கிறோம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.