விசேட அறிவிப்பை வெளியிடவுள்ள அமைச்சர் விஜேதாச?

நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ வியாழக்கிழமை (25) விசேட அறிவிப்பொன்றை வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவதற்காக அமைச்சு பதவியை இராஜிநாமா செய்வது தொடர்பிலேயே அவரது விசேட அறிவித்தலில் தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பில் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவை தொடர்பு கொண்டு வினவிய போது, புன்னகையுடன், ‘அது எனக்கு தெரியாது.’ என்று பதிலளித்தார். அத்தோடு நேற்று கூட்டப்பட்ட விசேட அமைச்சரவை கூட்டத்திலும் அவர் பங்கேற்றிருக்கவில்லை. தவிர்க்க முடியாத காரணத்தால் தான் விசேட அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ கடந்த சில மாதங்களாக தான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தெரிவித்து வருகின்றார். அதற்காக அவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றார். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தமது வேட்பாளர் விஜேதாச ராஜபக்ஷ என்பதை பகிரங்கமாவே தெரிவித்துள்ளார்.

அது மாத்திரமின்றி கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகிய அவர் விஜேதாச ராஜபக்ஷவை தலைவராகவும் நியமித்தார். எவ்வாறிருப்பினும் இந்த நியமனம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கமைய, அவருக்கு நீதிமன்றத்தால் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எனினும் அவர் தேர்தலில் களமிறங்குவது தொடர்பில் தொடர்ச்சியாக கருத்துக்களை முன்வைத்து வந்தார்.

அது மாத்திரமின்றி கடந்த 11ஆம் திகதி தேர்தல் செயற்பாட்டு அலுவலகமொன்றையும் அவர் திறந்து வைத்தார். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பங்கேற்புடன் அத்துருகிய பிரதேசத்தில் இந்த தேர்தல் செயற்பாட்டு அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது. சு.க.வின் முன்னாள் பொதுச் செயலாளர்களான துஷ்மந்த மித்ரபால, கீர்த்தி உடவத்த உள்ளிட்ட தரப்பினர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

சுதந்திர கட்சியிலிருந்து நீக்கப்பட்ட தயாசிறி ஜயசேகர மனித நேய மக்கள் கூட்டணியின் தலைவராக செயற்பட்டு வந்த நிலையில், அவரது நீக்கத்துக்கு எதிராக நீதிமன்ற உத்தரவு கிடைக்கப்பெற்றது. இதனையடுத்து மீண்டும் சுதந்திர கட்சி பொதுச் செயலாளராக பதவியேற்றுள்ள தயாசிறி ஜயசேகர மைத்திரிபாலவுடன் இணைந்து செயற்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் சுதந்திர கட்சியின் மைத்திரி – தயாசிறி தரப்பின் வேட்பாளராக விஜேதாச களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்