சுமார் 4 கோடி ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் இளைஞர்கள் நால்வர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் கொழும்பு மற்றும் வெல்லம்பிட்டி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 26 முதல் 34 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் ஆவர்.
இளைஞர்கள் நால்வரும் மலேசியாவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இதன்போது, விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இளைஞர்கள் நால்வரும் கொண்டு வந்த பயணப்பொதியில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 4 கிலோ 22 கிராம் குஷ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட இளைஞர்கள் நால்வரும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று வியாழக்கிழமை (20) ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.இது தொடர்பில் விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




