வீதிகளில் பயணிப்பவர்களிடம் வாள்களை காண்பித்து நகைகள் கொள்ளை

வீதிகளில் பயணிப்பவர்களிடம் வாள்களை காண்பித்து அச்சுறுத்தி நகைகளை கொள்ளையிடும் கும்பலுடன் தொடர்புடைய நகை கடை உரிமையாளர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக திவுலப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

மரதகஹமுல பிரதேசத்தை  அண்மித்த பகுதிகளில்  நீண்ட காலமாக வீதிகளில் பயணிப்பவர்களிடம் வாள்களை காண்பித்து அச்சுறுத்தி நகைகளை கொள்ளையிடும் கும்பல் தொடர்பில் திவுலப்பிட்டிய பொலிஸார் விசாரணைகள் நடத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில், பல்லியப்பிட்டிய  பகுதியில்  மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவர்,  இரண்டு தங்க சங்கிலிகளை கொள்ளையிட்டு தப்பிச் செல்வதாக திவுலப்பிட்டிய பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மோட்டார் சைக்கிளை துரத்திச் சென்ற போது சந்தேக நபர்கள் இருவரும் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளானது படல்கம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வைத்து லொறி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

பின்னர், பிரதேசவாசிகளின் உதவியுடன் சந்தேக நபர்கள் இருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விபத்தின் போது சந்தேக நபர்கள் இருவரும் பயணித்த மோட்டார் சைக்கிள் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மீரிகம மற்றும் ஜா – எல ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இருவரே  இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த கொள்ளை கும்பலுடன் தொடர்புடைய நகை கடை உரிமையாளர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து, இரண்டு வாள்கள் , கொள்ளையிடப்பட்டதாக கூறப்படும் நகைகள் மற்றும் கைக்குண்டு உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திவுலப்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.