வெலிக்கடையில் படுகொலை செய்யப்பட்ட தியாகிகளை நினைவு கூர்ந்தும் வகையில் வெலிகடை சிறைச்சாலையில் உள்ள அரசியல் கைதிகளை பார்வையிட்டு அவர்களுடன் அன்பை பரிமாறிக்கொள்வதற்காக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரனும் அவரது கட்சி உறுப்பினர்களும் அருட்தந்தை மா.சக்திவேல் மற்றும் சிலரும் இன்று(23) வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றிருந்தனர்.
1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் இடம்பெற்ற தமிழின அழிப்பைத் தொடர்ந்து ஜூலை 25, 27ஆம் திகதிகளில் வெலிக்கடை சிறைச்சாலைக்குள், தங்கத்துரை, குட்டிமணி அடங்கலாக 53 அரசியல் கைதிகள் படுகொலைசெய்யப்பட்டனர்.
ஜூலை 23 ஆம் திகதி முதல் தொடர்ந்த இந்தத் திட்டமிட்ட இனப்படுகொலைகளின்போது மூவாயிரம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதுடன், தென்பகுதியில் வாழ்ந்த தமிழ் மக்கள் அவர்களது அனைத்து உடமைகளும் பறிக்கப்பட்ட நிலையில் வடக்கிற்கு விரட்டியடிக்கப்பட்டனர்.
83 கறுப்பு ஜூலை இனப்படுகொலை தொடர்பிலோ, 2009 இல் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரின் போது நிகழ்த்தப்பட்ட யுத்தக் குற்றங்கள் உட்பட மனித குலத்திற்கு எதிரான கொடூரங் கள் தொடர்பிலோ இதுவரை சிறிலங்கா அரசாங்கம் நீதியான விசாரணைகளை மேற்கொள்ள எந்த வொருநடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை.
அன்று முதல் தொடரும் தமிழினப் படுகொலைக்கு நீதிகோரும் போராட்டங்களும் இன்னமும் முடிவுக்கு வரவில்லை.