வேட்புமனு தாக்கல் இன்று மு.ப 6 மணிமுதல் பி.ப.2 மணிவரை சரண மாவத்தை மூடப்படும்

நாட்டின் 9 ஆவது நிறைவேற்றுத்துறை அதிகாரமுடைய ஜனாதிபதியை தெரிவு செய்யும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக 40 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ள நிலையில், வேட்புமனுக்களை பொறுப்பேற்றல் இன்று வியாழக்கிழமை (15) இடம்பெறவுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் காரியாலயத்தில் இன்று வியாழக்கிழமை (15) காலை 9 மணிமுதல் 11 மணிவரையான காலப்பகுதியில் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு   40    பேர்    வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.இதற்கமைய அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிட  22    பேரும், வேறு அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிட 1 வேட்பாளரும், சுயேட்சை வேட்பாளராக  17  பேரும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு 41 பேர் கட்டுப்பணம் செலுத்தியிருந்த நிலையில் 35 பேர் மாத்திரம் வேட்புமனுக்களை சமர்த்தித்து போட்டியிட்டனர்.

ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் மாதம் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் தேர்தலில் போட்டியிடுவதற்கு 40 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு கடந்த ஜுலை மாதம் 26 ஆம் திகதி அறிவிக்கப்பட்டது.கட்டுப்பணம் செலுத்துவதற்கு 14 நாட்கள் காலவகாசம் வழங்கப்பட்டது.

இக்காலப்பகுதிக்குள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள்,பிறிதொரு அரசியல் கட்சி மற்றும் சுயாதீன வேட்பாளர் என்ற அடிப்படையில்  40  பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.கட்டுப்பணம் செலுத்தலுக்காக வழங்கப்பட்ட காலவகாசம் நேற்று  புதன்கிழமை நண்பகலுடன் நிறைவடைந்தது.

தாக்கல் செய்யப்படும் வேட்பு மனுக்கள் தொடர்பில் மு.ப 9 மணிமுதல் 11.30 மணிவரையான காலப்பகுதியில் எவரேனும் வேட்பாளர் அல்லது அத்தகைய எதிர் வேட்பாளரின் பெயர் குறித்த நியமனப்பத்திரத்தில் கைச்சாத்திட்டவர் அல்லது பிறிதொருவர் ஆட்சேபனைகளை முன்வைக்க முடியும்.

அனுமதி பெற்றவர்களுக்கு மாத்திரமே பிரவேசிக்க முடியும்

வேட்பாளர்கள்,வேட்பாளரின் வேட்புமனுப்பத்திரத்தில் கையொப்பமிட்டவர்கள்,வேட்பாளர் ஒருவர் சார்பாக மூன்று விருந்தினர்கள்,அரசாங்க தகவல் திணைக்களத்தின் அனுமதியுடன் வேட்பு மனுத்தாக்கல் அறிக்கையிடுவதற்கு அனுமதிப் பெற்ற ஊடகவியலாளர்கள்,தேர்தல்கள் ஆணைக்குழுவில் அனுமதிப் பெற்ற பணிக்குழுவினர்;,துணைநிலை சேவை வழங்கும் நிறுவன சேவையாளர்கள்,தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஊழியர்கள்,வேட்பாளர்களின் பிரத்தியேக பாதுகாப்பு அலுவலர்கள் மாத்திரமே காலை 9 மணிமுதல் 2 மணிவரையான காலப்பகுதியில் தேர்தல்கள் ஆணைக்குழு அமைந்துள்ள சரண மாவத்தைக்குள் பிரவேசிக்க முடியும்.

இன்று காலை 6 மணிமுதல் பி.ப 2 மணிவரை சரண மாவத்தை மூடப்பட்டிருக்கும். பொது மக்களின் வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் இக்காலப்பகுதிக்குள் சரண மாவத்தைக்குள் பிரவேசிக்க முடியாது.ஆகவே சரண மாவத்தையை பயன்படுத்துவோர் போக்குவரத்து வசதிகளை இராஜகிரிய பஸ் நிலையத்துக்கு அருகிலுள்ள நுழைவு பாதை வழியாக ஏற்பாடு செய்துக் கொள்ள வேண்டும்.

விசேட போக்குவரத்து  மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள்

பாதுகாப்பு கடமைகளுக்காக மாத்திரம் பொலிஸ் விசேட அதிரப்படையினர் உட்பட சுமார் ஆயிரம் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். அத்துடன் வேட்புமனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களது ஆதரவாளர்கள் தங்கியிருக்க விசேட

இடங்களும் அமைக்கப்பட்டுள்ளன. 

தேர்தல்கள் ஆணைக்குழு அமைந்துள்ள பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.அத்துடன் விசேட பாதுகாப்பு அரண் மற்றும் வீதி தடைகளும் இடப்பட்டுள்ளன.

இதனிடையே குறித்த காலப்பகுதியில் விசேட போக்குவரத்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.இதற்காக 300 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடவுள்ளனர். இந்த போக்குவரத்து திட்டம்  இன்று காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைமுறைப்படுத்தப்படும்.

ஆயுர்வேத சந்தியில் இருந்து ராஜகிரிய சந்தி வரையான ஸ்ரீ ஜயவர்தன வீதியின் கொழும்பிலிருந்து வெளியேறும் பகுதியில் போக்குவரத்து முற்றாக மூடப்படும்.அதேபோன்று ராஜகிரிய சந்தியில் இருந்து ஆயுர்வேத சந்தி வரையிலான இடைப்பட்ட பழைய வீதியின் கொழும்புக்குள் உள்நுழையும் வீதியும் முழுமையாக மூடப்படும்.

இதற்கமைய ஸ்ரீ ஜயவர்தன வீதியின் பொல்துவ சந்தி தொடக்கம் டி.எஸ்.சேனாநாயக்க வீதியின் வரையிலான பகுதியில் அத்தியாவசிய தேவைக்காக மாத்திரம் போக்குவரத்துக்காக பயன்படுத்துமாறு கோரிக்கை விடுக்கிறோம்.ராஜகிரிய சந்தி கோட்டா வீதி பழைய வீதி பொல்துவ சந்தி உட்பட பகுதிகளிலும் அத்தியாவசிய தேவை நிமித்தம் பயன்படுத்துமாறும் கோரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தலவத்துகொட சந்தியில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் வாகனங்கள் மாற்று வீதியை பயன்படுத்த முடியும். குறிப்பாக கிம்புலவல சந்தியில் இருந்து பிட்டகோட்டை சந்திக்குள் பிரவேசித்து நுகேகொடை கிருப்பலனை வீதியின் ஊடாக கொழும்புக்குள் நுழைய முடியும்.இதன் மூலம் போக்குவரத்து நெரிசலை குறைக்கலாம். எனினும் வேட்பாளர்கள் பயணிக்கும் வாகனங்களுக்கு இந்த வீதிகளை பயன்படுத்தி தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு செல்ல முடியும்.