களுத்துறையில் பாணந்துறை – ஹிரண பகுதியில் போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று புதன்கிழமை (02) கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேக நபரான இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் ஹிரண பகுதியில் வசிக்கும் 28 வயதுடைய இளைஞன் ஆவார்.
சந்தேக நபரான இளைஞனிடமிருந்து 80 போதை மாத்திரைகள், மோட்டார் சைக்கிள் மற்றும் 645,600 ரூபா பணம் என்பன பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட இளைஞன் மேலதிக விசாரணைகளுக்காக ஹிரண பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹிரண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





