14 துறைகள் மூலம் கட்டுமானத்துறையை மேம்படுத்த புதிய கொள்கை

கோவிட் தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக கட்டுமான ஒப்பந்ததாரர்களுக்கு செலுத்த முடியாத 200 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகை வழங்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

தொழிநுட்ப காரணங்களினால் பற்றுச் சீட்டுகளை செலுத்த முடியாத ஒப்பந்தக்காரர்களுக்கு தற்போது பற்றுச் சீட்டுகளை செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் கட்டுமானத் துறையின் பங்களிப்பு 8%-9% ஆகும். நாட்டின் மக்கள் தொகையில் 20% பேர் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய, கடந்த கோவிட் மற்றும் பொருளாதார நெருக்கடியினால் வீழ்ச்சியடைந்துள்ள நிர்மாணத்துறையை மேம்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை ஆராய்வதற்காக 05 குழுக்கள் அமைக்கப்பட்டன. அரசு அதிகாரிகள், கட்டுமானத் துறை வல்லுநர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள்  ஆகியோர் இந்தக் குழுவில் உள்ளனர்.

அந்தக் குழுக்களின் ஊடாக, இலங்கையில் நிர்மாணத்துறையை கட்டியெழுப்புவதற்கு 50 முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டதோடு, உடனடியாக நடைமுறைப்படுத்தக்கூடிய 14 விடயங்களில் அரசாங்கம் கவனம் செலுத்தியது.

நிர்மாணத்துறையை ஊக்குவிக்கும் வகையில் புதிய கொள்கையொன்றை உருவாக்குவதற்கு அமைச்சரவையில் இந்த விடயம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டார்.

இதேவேளை, நிர்மாண ஒப்பந்ததாரர்களை தாமதக் கட்டணம் அறவிடாமல் பதிவு செய்யும் பணியை நிர்மாண கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபை மீண்டும் ஆரம்பித்துள்ளது.

தேசிய நிர்மாண சங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க 2020 ஆம் ஆண்டுக்கு முன்னர் பதிவுகளை பெற்றுக்கொள்ள முடியாதவர்களும் மீள்பதிவை பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, சிறிய மற்றும் நடுத்தர ஒப்பந்ததாரர்களின்  (C4-C9) 03 வருட கால தாமதக் கட்டணமும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக நிர்மாண கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, எந்தவொரு ஒப்பந்ததாரரும் நிர்மாண கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையில் பதிவு செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

நிர்மாண கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலையீட்டின் மூலம் கடந்த 5 வருடங்களுக்குள்  மேசன், தச்சன், கம்பி புதுப்பித்தல், பிளம்பர் மற்றும் தரை ஓடு போடுபவர் ஆகிய துறைகளின் கீழ் சுமார் 7,000 கட்டிட தொழிலாளர்களுக்கு NVQ சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்காக செலவிடப்பட்ட தொகை ரூ. 485 மில்லியன் ஆகும்.

நிர்மாணத்துறையில் 26 கைவினைப் பிரிவுகளின் கீழ் NVQ தகைமைகளைக் கொண்ட திறமையான கைவினைஞர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் வேலைத்திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக நிர்மாண கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதுவரை சுமார் 300 அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

கடந்த 5 வருடங்களில் 1,386 கட்டுமான இயந்திர இயக்குனர்கள் அனுராதபுரம், கல்குளம கட்டுமான இயந்திர இயக்கிகள் கல்லூரியிலும், 814 பேர் பத்தரமுல்ல, பெலவத்தை கட்டுமான இயந்திர பயிற்சி நிலையத்திலும் பயிற்சி பெற்றுள்ளதாக நிர்மாண கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.