1460 ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் பொதிகளுடன் ஒருவர் கைது

1460 ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் பொதிகளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று (29) கைது செய்யப்பட்டதாக பண்டாரவளை பொலிஸ் குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

மவுண்ட் பகுதியில் வசிக்கும் 33 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரிடம் 440 ஐஸ் போதைப்பொருள் பொதிகளும் 1020 ஹெரோயின் போதைப்பொருள் பொதிகளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பதுளை பண்டாரவளை, ஹப்புத்தளை, வெலிமடை, எல்ல மற்றும் ஏனைய பல பகுதிகளுக்கு விநியோகிப்பதற்காக இந்த போதைப்பொருள்கள் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்த சந்தேக நபர் தனது சகோதரிக்கு பிறந்தநாள் பரிசாக கொடுக்கும் போர்வையில் போதைப்பொருளை பார்சல் செய்து வரைபடத்தின் உதவியுடன் விநியோகித்தபோதே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் இந்த பகுதிகளில் உள்ள  மின்கம்பங்கள், தொலைபேசி கம்பங்கள் போன்ற இடங்களில் குழிகள் தோண்டி போதைப்பொருள் பொதிகளை புதைத்து வைப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், சந்தேக நபர் கைது செய்யப்பட்டபோது குழிகள் தோண்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட மண்வெட்டியும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பண்டாரவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணையின் பின்னர் சந்தேக நபரை பண்டாரவளை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.