அரசாங்கத்தின் 15 சதவீத மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொஸ்வத்த பகுதியில் புதன்கிழமை (02) தீப்பந்தங்களை கையில் ஏந்தி மக்கள் போராட்ட இயக்கம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தது.
புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் மின்கட்டணத்தை கணிசமானளவு குறைத்து மக்களுக்கு நிவாரணத்தை வழங்குவதாக உறுதி அளித்திருந்த நிலையில், தற்போது மீண்டும் மின்கட்டணத்தை அதிகரிப்பதாக அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில் மக்கள் போராட்ட இயக்கத்தினரால் மேற்படி கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அன்றைய தினம் மாலை வேளையில் கொஸ்வத்த சந்திக்கு அருகில் கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்று மின்சாரக் கட்டணத்தை குறைத்திடு”, சர்வதேச நாணய நிதியத்தின் தாளத்துக்கேற்க அரசாங்கம் செயல்படுகிறது, சர்வதேச நாணய நிதியம் ஓர் மரணப் பொறி, மின் கட்டணம் குறைக்கப்பட வேண்டும் உள்ளிட்ட வாசகங்கள் பொறிக்கப்பட்ட பாதைகளையும், தீப்பந்தங்களையும் கைகளில் ஏந்தியபடி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
இது தொடர்பில் மக்கள் போராட்ட இயக்கத்தின் கொழும்பு மாவட்ட குழு பிரதிநிதி திலான் சம்பத் குறிப்பிடுகையில்,
மின் கட்டண உயர்வால் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் பாதிப்படையக்கூடும். அரசாங்கத்தின் இத்தீர்மானத்தால் மின்கட்டணத்தை செலுத்த முடியாமல் பொதுமக்கள் மீண்டும் நெருக்கடிக்குள்ளாகலாம். ஆகையால் மின் கட்டணத்தைக் குறைப்பதுடன் மின்சார சபை மறுசீரமைப்புக்கான சட்ட மூலத்தை மீளப் பெருமாறும் வலியுறுத்துகிறோம் என்றார்.