தனமல்வில பொலிஸ் பிரிவில் பாடசாலை மாணவி ஒருவர் தவறான செயலுக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் குறித்த பாடசாலையின் அதிபர், ஆசிரியர் மற்றும் இரண்டு ஆசிரியைகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவி தவறான செயலுக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பிலான தகவல்களை அறிந்து பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்காமல் மறைத்த காரணத்திற்காக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் பாடசாலை மாணவியை தவறான செயலுக்கு உட்படுத்தியமை தொடர்பில் 14 மாணவர்களை சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு நிலையத்தில் ஒப்படைக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் நேற்று முன்தினம் (12) உத்தரவிட்டது.
மேலும், மூன்று மாணவர்கள் மற்றும் அவர்களுக்கு உதவிய பெண்ணை ஆகஸ்ட் 22ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வெல்லவாய நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.தனமல்வில பிரதேச பாடசாலையொன்றில் கல்வி பயின்ற பாடசாலை மாணவியை தவறான செயலுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 17 மாணவர்கள் வெல்லவாய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தவறான செயலுக்கு உட்படுத்தப்பட்ட சிறுமி ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்ட போது, அங்கிருந்த வைத்தியர் ஒருவர் சிறுமியை மேலும் கொடுமைப்படுத்தியதாக அவரது தாயார் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதன்படி, சிறுமியின் தாய் ஹம்பாந்தோட்டை பொலிஸ் மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையில் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.