18 கோடி ரூபா பெறுதிமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றல்

சரக்கு விமான சேவைகள் மூலமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட 18 கோடி ரூபாய் பெறுமதியான கொக்கைன் மற்றும் குஷ் ஆகிய போதைப்பொருட்கள் வெள்ளிக்கிழமை (28) கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த போதைப்பொருட்கள் தயிரில் இருந்து எடுக்கப்பட்ட புரதங்களின் பவுடர் என கூறி கொண்டுவரப்பட்டுள்ளது.

சீதுவையில் உள்ள  வெளிநாடுகளுக்கு பொதிகள் அனுப்பும் சேவை நிறுவனத்தில் ஆறு பெரிய பிளாஸ்டிக் போத்தல்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

அவற்றில், 2 கிலோகிராம் 30 கிராம் கொக்கெய்ன் மற்றும் 2 கிலோகிராம் 177 கிராம் கஞ்சா வகை குஷ் போதைப்பொருட்கள் இருந்ததாக சுங்க ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட சுங்கப் பணிப்பாளர்  சீவலி அருக்கொட தெரிவித்தார்.

ஒரு கிராம் கொக்கைன் 70,000 ரூபாவாகும், ஒரு கிராம் குஷ் 20,000 ரூபாவாகும். அதன்படி, கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த பெறுமதி 185,640,000 ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த போதைப்பொருள் பொதி கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து கடவத்தை மற்றும் கொழும்பு ஆகிய இரண்டு முகவரிகளுக்கு ஒரு மாதத்திற்கு முன்னர் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த பொதிகள்  சந்தேகத்திற்கிடமானதாக காணப்பட்டதால் உரியவர்கள் வந்து எடுக்கும் வரை சுங்கத்துறையினர் அதனை அகற்ற வில்லை. இதற்கிடையில், பொதிகளை பெற்றுக்கொள்ள ஒருவரும் வராததால் முகவரிகள் தவறானவை என அதிகாரிகள் கண்டறிந்து சோதனையிட்டபோது அவற்றில் போதைப்பொருள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

போதைப்பொருட்கள் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.