இது தொடர்பில் தெரியவருவதாவது,
2019 ஆம் ஆண்டில் நபரொருவரை சுட்டுக் கொலை செய்துவிட்டு துபாயிற்குத் தப்பிச் சென்ற சந்தேக நபரொருவர் கடந்த 12 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.
நுகேகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடைய வர்த்தகரொருவரே இவ்வாறு அழைத்துவரப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து 90 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து, சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், நுகேகொடை பிரதேசத்தில் உள்ள காணியொன்றில் மிகவும் சூட்சுமமான முறையில் புதைக்கப்பட்டிருந்த துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கியானது கொலை சம்பவமொன்றுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.