சுங்கத்தில் இருந்து 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழு முன்வைத்த பரிந்துரைகளுக்கு அமைய இதுவரையில் எவ்வித விசாரணைகளும் மேற்கொள்ளப்படவில்லை. நாட்டுக்கு தரமற்ற மருந்துகளும், ஆயுதங்களும் கொண்டுவரப்பட்டுள்ளன. கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமைக்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (26) நடைபெற்ற கோப் குழு அறிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் மீது முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களுக்கு எதராக உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.ஆகவே பாராளுமன்ற சிறப்புரிமையில் இருந்துக்கொண்டு குற்றச்சாட்டுக்களை முன்வைக்காமல், வெளியில் குற்றச்சாட்டுக்களை முன்வைக்குமாறு ஆளும் தரப்பின் 159 உறுப்பினர்களிடமும் கேட்டுக்கொள்கிறேன்.இனி சட்டத்தின் ஊடாக அனைத்தையும் தீர்த்துக்கொள்ளலாம்.என்மீதும், எனது மனைவி மீதும் போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்த பிரதான ஊடகம் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு எதிராக விளக்க கோரல் கடிதம் அனுப்பி வைத்துள்ளேன்.
விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் அரச நிறுவனங்கள் பற்றி கோப் குழுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிறுவனங்கள் வீழ்சசியடைவதற்கு அல்லது நெருக்கடிக்குள்ளாக்குவதற்கான காரணத்தை ஆராய வேண்டும்.கடந்த காலங்களில் முன்னெடுத்த சகல அபிவிருத்தி கருத்திட்டங்கள் மற்றும் அபிவிருத்தி பணிகளுக்கு எதிராகவே மக்கள் விடுதலை முன்னணி செயற்பட்டது. கொழும்பு துறைமுக அபிவிருத்தி கருத்திட்டத்தால் சீகிரியா குன்றையும் பெயர்த்தெடுக்க நேரிடும் என்று யார் குறிப்பிட்டது. மக்கள் விடுதலை முன்னணியின் போராட்டத்தால் நாடு பல பில்லியன் டொலர்களை இழந்துள்ளது.
323 கொள்கலன்கள் விடுவிப்பு பாரியதொரு மோசடியாகும்.உண்மையை வெளிப்படுத்த அரசாங்கம் தவறியுற்றது. இந்த கொள்கலன்கள் விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழு அறிக்கையை விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சர் இன்றுவரை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கவில்லை. சுங்க பணிப்பாளர் நாயகத்துக்கு வழங்கப்படாத அதிகாரத்தை கொண்டு அவர் இந்த கொள்கலன்களை விடுவித்துள்ளார் என்று குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொள்கலன்கள் விடுவிப்பு தொடர்பான குழு வெளிப்படையற்ற வகையில் செயற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் குழு வரையறைக்கு அப்பாற்பட்ட வகையில் செயற்பட்டுள்ளது, துறைமுகத்தில் எவ்வித நெருக்கடிகளும் உண்மை காரணிகளை அடிப்படையாகக் கொண்டு ஏற்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழுவின் நான்கு பரிந்துரைகளும் இதுவரையில் செயற்படுத்தப்படவில்லை.
கொள்கலன்கள் விடுவிப்பு தொடர்பில் தடயவியல் கணக்காய்வு விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்ப்பட்டுள்ளது.இதுவரையில் என்ன விசாரணைகளை மேற்கொண்டுள்ளீர்கள். எந்த விசாரணைகளும் மேற்கொள்ளப்படவில்லை.இவ்வாறான நெருக்கடியில் நாட்டுக்கு தரமற்ற மருந்துகளும், ஆயுதங்களும் கொண்டு வரப்பட்டுள்ளன.ஆனால் இதுவரையில் உண்மை வெளிப்படுத்தப்படவில்லை என்றார்.





