ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இதுவரை (செவ்வாய்க்கிழமை ) 36 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு கடந்த மாதம் 26 ஆம் திகதி வெளியானவுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுவதற்கு முதலாவதாக கட்டுப்பணம் செலுத்தினார்.இதற்கமைய இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 36 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
ஜனாதிபதித் தேர்தலுக்கான ஆரம்பக்கட்ட பணிகளை தேர்தல்கள் ஆணைக்குழு நிறைவு செய்துள்ளது.இதற்கமைய கட்டுப்பணம் செலுத்தல் நாளை நண்பகலுடன் நிறைவடையவுள்ளது.
வேட்புமனுக்கள் பொறுப்பேற்றலுக்கான பணிகளை தேர்தல்கள் ஆணைக்குழு முன்னெடுத்துள்ளதுடன், தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளின் பாதுகாப்பு பன்மடங்கு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலை இலக்காகக் கொண்டு பிரதான அரசியல் கட்சிகள் கூட்டணிகள் அமைக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.எதிர்ரும் வாரம் முதல் பிரதான அரசியல் கட்சிகள் நாடளாவிய ரீதியில் தேர்தல் பிரசாரங்களை முன்னெடுக்கவுள்ளன.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளர்களாக புதிய ஜனநாயக முன்னணி சார்பில் போட்டியிடுவதற்கு ஓசல ஹேரத்தும்,இலங்கை தொழிலாளர் கட்சி சார்பில் ஏ.எஸ்.பி.லியனகேவும், ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் சஜித் பிரேமதாசவும்,தேசிய அபிவிருத்தி முன்னணி சார்பில் எஸ்.கே.பண்டாரநாயக்கவும், தேசிய ஜனநாயக முன்னணி சார்பில் விஜயதாஸ ராஜபக்ஷவும், ஐக்கிய சோஷலிச கட்சி சார்பில் சிறிதுங்க ஜயசூரியவும், புதிய சீஹல உருமய கட்சி சார்பில் சரத் மனமேந்திரவும் ஜனசேனா முன்னணி சார்பில் பத்தரமுல்லே சீலரத்ன தேரரும், அருனலு மக்கள் முன்னணியின் சார்பில் கே.ஆர்.கிறிஷானும்,தேசிய மக்கள் சக்தி சார்பில் அனுரகுமார திஸாநாயக்கவும், சோசலிச சமத்துவ கட்சி சார்பில் பானி விஜேசிறிவர்தன, நவ சமசமாஜக் கட்சி சார்பில் பிரியந்த புஸ்பகுமாரவும், எங்கள் மக்கள் சக்தி சார்பில் ஜே.டீ.கே.விக்கிரமரத்ன, இலங்கை சமசமாஜக் கட்சியின் சார்பில் மஹிந்த தேவகே, ஐக்கிய ஜனநாயக கூட்டணி சார்பில் அப்துல் மொஹமட் இன்பாஸ், ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் அனோஜ டி சில்வா, சோசலிச மக்கள் மன்றம் சார்பில் நுவன் போபகே, சர்வஜன கட்சியின் சார்பில் திலித் ஜயவீர ஆகியோர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் என்ற ரீதியில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
அதேவேளை அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சி என்ற பிரிவில் றுஹுணு மக்கள் முன்னணி சார்பில் அஜந்த த சொய்சா கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.
இதேவேளை சுயேட்சை வேட்பாளர்களாக ரணில் விக்கிரமசிங்க, சரத் கீர்த்தி ரத்ன, கே.கே.பியதாஸ, ஆனந்த குலரத்ன, அக்மீமன தயாரத்ன தேரர், சிறிபால அமரசிங்க , சரத் பொன்சேகா, அன்டனி விக்டர் பெரேரா, ஐதுருஸ் முஹம்மது இல்யாஸ், மானகே பேமசிறி,அனுர சிட்னி ஜயவர்தன, டீ.எம்.பண்டாரநாயக்க, எம்.திலகராஜா, ரொஷான் ரணசிங்க, பா.அரியநேத்திரன், சமிந்த அனுருத்த ஆகியோர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.