சென்னையை அடுத்த ஆவடி மாநகராட்சி, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வளாகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் அம்மா திருமண மண்டபம் கட்ட தீர்மானிக்கப்பட்டது. இதற்காக ரூ.11 கோடி மதிப்பீட்டில் 2018-ம் ஆண்டு 29,497 சதுர அடி பரப்பளவில் திருமண மண்டபம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. 3 அடுக்குகள் கொண்ட இந்த மண்டபத்தின் முதல் தளத்தில் நவீன சமையலறை வசதியுடன் 400 பேர்உணவருந்தும் கூடமும், 2-ம் தளத்தில் 700 பேர் அமரும் வகையில் குளிர்சாதன வசதியுடன் கூடிய மணமேடையும், 3-ம் தளத்தில் மணமகன், மணமகள் ஓய்வு அறை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், இந்த மண்டபத்தில் 75 நான்கு சக்கர வாகனங்களும், 100 இருசக்கர வாகனங்களும் நிறுத்தக்கூடிய அளவுக்கு இடவசதி உள்ளது. மண்டபத்துக்குள் கண்காணிப்பு கேமராக்கள், சூரியஒளி மின்சாரம் தயாரிப்பதற்கான வசதிகள் என தனியார் மண்டபத்தையே மிஞ்சும் அளவுக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் அனைவரும் நியாயமான கட்டணத்தில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை நடத்த நாள் ஒன்றுக்கு ரூ.50 ஆயிரம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், மண்டபம் கட்டி முடிக்கப்பட்டு 3 ஆண்டுகள் ஆகியும் இதுவரை திறக்கப்படவில்லை. மேலும், இந்த மண்டபம் ஆவடி ரயில், பேருந்து நிலையம் மற்றும் மார்க்கெட்டுக்கு அருகில் இருப்பதால் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
ஆனால், இது கடந்த அதிமுக ஆட்சியில் கட்டப்பட்டதால், தற்போதைய ஆட்சியாளர்களின் ‘ஈகோ’ காரணமாகவும், அதிகாரிகளின் அலட்சியம் காரணமாகவும் திருமண மண்டபத்தை திறக்காமல் உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அத்துடன், திருமண மண்டபத்தை சுற்றி சில தனியார் மண்டபங்கள் உள்ளன. இதனால், அம்மா மண்டபத்தை திறந்தால், அந்த தனியார் மண்டபங்களின் வருமானம் பாதிக்கும் என்பதாலும் மண்டபத்தை திறக்காமல் காலம் தாழ்த்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நிகழ்ச்சிகள் ஏதும் நடைபெறாததால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதோடு, பொதுமக்களுக்கும் குறைந்த கட்டணத்தில் தங்கள் வீட்டு சுபநிகழ்ச்சிகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
நிகழ்ச்சிகள் நடைபெறாததால் மண்டம் பராமரிப்பின்றி பாழாகும் நிலை உருவாகியுள்ளது. மேலும், அருகில் திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் குப்பைகளை ஏற்றி வரும் வாகனங்களை நிறுத்தும் பார்க்கிங் இடமாக இந்த மண்டம் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. மண்டபத்தை திறக்கக்கோரி ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் உள்ளிட்ட பல்வேறு ஊடகங்களில் செய்தி வெளியாகியும் இதுவரை மண்படத்தை திறக்காமல் அதிகாரிகள் அலட்சியமாக உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.