அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ்.அமைப்பில் சேர்ந்துகொள்ளலாம் என்ற அனுமதி, நாட்டிற்கு பெரிய அச்சுறுத்தலுக்கான அறிகுறி!

மத்திய அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் சேர்ந்து கொள்ளலாம் என பா.ஜ.க. அரசு அனுமதி அளித்துள்ளது இது கண்டனத்திற்குரியது. இதுதான் பா.ஜ.கவின் உண்மைமுகம்! மோடியின் முகமூடியை திறந்தால் ஆர்.எஸ்.எஸின் முகம் தெரியும் என்பது இதைவிட வேறென்ன நமக்கத் தெரியவேண்டும்? அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் சேர்ந்துகொள்ளலாம் என்ற அனுமதி நாட்டிற்கு பெரிய அச்சுறுத்தலுக்கான அறிகுறி.

ஆர்.எஸ்.எஸ் உறுப்பினராக இருந்த நாதுராம் கோட்சே, மகாத்மா காந்தியை சுட்டு படுகொலை செய்ததாலும், தொடர் வன்முறைக் காரணங்களாலும் 1948-ன் ஆரம்பத்தில், “நாடு இப்போது பெற்றியிருக்கும் சுதந்திரத்தைச் சீர்குலைக்கும் ஆர்.எஸ்.எஸ் ஒரு சட்டவிரோத அமைப்பு” எனக் குறிப்பிடப்பட்டு, தடை செய்யப்பட்டது. 1966 ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட தடையை மீண்டும் மத்திய பா.ஜ.க. அரசு நீக்கியுள்ளது. இதுதான் மோடி என்ற சாவர்க்கரின் சர்வாதிகார அரசியல்.

அரசு ஊழியர்களாக இருப்பவர்கள் எந்த அரசியல் கட்சியிலும் உறுப்பினர்களாக இருக்கக்கூடாது என்பதுதான் அரசு விதி. அதன்படியே தற்போது வரை மத்திய மாநில அரசு மற்றும் பொது நிறுவனங்களில் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் சேரும் வகையில் அனுமதி வழங்கப்பட்டிருப்பது ஒட்டுமொத்த இந்திய திருநாட்டை ஆர்.ஆர்.எஸ்ஸின் நிறமாக மாற்றுவதே ஆரிய சனாதனத்தின் சதிதிட்டம்.

அரசு ஊழியர்களை அரை டவுசர் போட்டு ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு அனுப்பிவைக்கும் வேலையை பா.ஜ.க. தொடங்கிவிட்டது. இனி நாட்டின் நிலை சங்பரிவாரமாக மாற்றமடையும்! மக்கள் விழித்துக் கொள்ளவேண்டும். இந்த படுபாதக செயலில் ஈடுபட்டுள்ள பா.ஜ.க. அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன். அதோடு மட்டுமன்றி, மத்திய மாநில அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் சேரக்கூடாதென்று கேட்டுக் கொள்கிறேன். என முக்குலத்தோர் புலிப்படைக் கட்சித்தலைவர் சேது. கருணாஸ் கண்டனம்!