ஆதவ் அர்ஜுனா மீது விசிக துணை பொதுச் செயலர்கள் கடும் விமர்சனம்

விசிகவின் முன்னாள் நிர்வாகியான ஆதவ் அர்ஜுனா குறித்து அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

விசிக முன்னாள் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா உள்ளிட்டவற்றில் திமுக கூட்டணிக்கு எதிராக பேசியதால் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதையொட்டி அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், “அடித்தட்டு தொண்டனின் குரலாக எப்போதும் இருப்பேன்” என குறிப்பிட்டு விசிக தலைவரின் கவிதையையும் பகிர்ந்திருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் விசிக துணை பொதுச்செயலாளரான வன்னியரசு, “நீயாக முன் வந்து நெருப்பாக விழி சிவந்து நிலையாக போர் புரிந்தால் உனக்கு நிச்சயமாய் விடியலுமுண்டு. நெஞ்சில் துணிச்சலின்றி அஞ்சி ஒடுங்கி கஞ்சி குடிப்பதற்கே கெஞ்சி கிடக்கிறாயே. விசிக தலைவரின் கவிதையை திருத்தம் செய்து அனுப்பியுள்ளேன்” என குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், மற்றொரு துணை பொதுச்செயலாளரான எஸ்.எஸ்.பாலாஜி எம்எல்ஏ, “சிறுத்தைகளை விலை பேசவும்; சிறுத்தைகளுக்கு வலை வீசவும்; இங்கே ஆற்றல் எவருக்குண்டு? தாய்ச்சொல் கேளாதவரை வாய்ச்சொல் வைத்து வழிபடுவதோ?” என குறிப்பிட்டிருந்தார். அவரே தனது மற்றொரு பதிவில் “ஒரு அரசர் எப்போதும் தவறிழைக்க மாட்டார்” எனவும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, ஆதவ் அர்ஜுனா தனது சமூக வலைதள பக்கத்தில் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் தனது பயணம் குறித்து ஒளிபரப்பப்பட்ட காணொலியை பகிர்ந்து, “ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு’ என்ற முழக்கத்துடன் எளிய மக்கள் அதிகாரத்தை அடைவதற்கான பிரச்சாரத்தை மக்கள் சக்தியுடன் விரைவில் உருவாக்குவோம்” என கூறியுள்ளார்.