இந்தியாவில் பெண்கள் தலைமைத்துவ வளர்ச்சி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதம்

இந்திய தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பு சார்பில் ‘அரசியல், அதிகாரம் உள்ளிட்டவற்றில் இருக்கும் கண்ணுக்கு தெரியாத தடைகளை உடைத்து வளர்ச்சியடையும் பெண்கள்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடந்தது.

கருத்தரங்கத்துக்கு இந்திய தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பின் சென்னை மகளிர் பிரிவுதலைவர் திவ்யா அபிஷேக் தலைமை தாங்கினார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:

கடந்த 10 ஆண்டுகளில் தொழில்நுட்ப ரீதியாக இந்தியா மிகுந்த வளர்ச்சி அடைந்துள்ளது. குறிப்பாகபெண்களை தலைமைத்துவமாக கொண்ட வளர்ச்சி அதிகரித்துள்ளது. இலவச மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் 17 கோடி பெண்களுக்கு காப்பீட்டு அட்டை வழங்கப்பட்டுள்ளது. இது மொத்தம் உள்ள காப்பீட்டு அட்டையில் 50 சதவீதம்.

விரைவு நீதிமன்றங்களின் மூலம்2,53,000 பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. பங்குச்சந்தையில் இடம்பெற்றுள்ள முதல்100 நிறுவனங்களின் இயக்குநர்களில் 22 சதவீதம் பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா சுதந்திரம் அடைந்த பின்பு மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மையத்தின் இயக்குநராக ஒரு பெண் தலைமைஏற்றுள்ளது பெருமைக்குரியது. இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர்ஹெச்.ராஜா, இளம் பெண் தொழில்அதிபர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.