கரூரில் கூட்ட நெரிசலில் உயிர் இழந்தோர் குடும்பங்களுக்கு வைகோ இரங்கல்

கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரை பயணத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு, குழந்தைகள், பெண்கள் உட்பட 30 க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்து உயிரிழந்தனர். இன்னும் பலர் கலைக்கிடமான நிலையில் இருக்கின்றனர் என்ற செய்தி பேரிடியாக நெஞ்சை தாக்குகிறது.

உயிர் ஊசலாடும் நிலையில், பலர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற தகவல் மிகுந்த கவலை தருகிறது. பரப்புரைக்கு முன்னரே காவல்துறையினர் வகுத்த விதிமுறைகள் முழுமையாகப் பின்பற்றப்படாததால் தமிழ்நாடு வரலாறு காணாத கொடுந்துயரம் நேர்ந்திருக்கிறது.

இதுபோன்ற பரப்புரைகளில் அரசியல் இயக்கங்கள் மற்றும் பொது அமைப்புக்கள் ஈடுபடும்போது கட்டுக்கடங்காத கூட்டம் வரும் என்பதை முன்கூட்டியே உணர்ந்து அத்தகைய அவலம் நேராத வண்ணம் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதை கரூர் விபரீதம் உணர்த்துகிறது.

செய்தி அறிந்த மாத்திரத்தில் தமிழக முதலமைச்சர் அவர்கள் மின்னல் வேகத்தில் செயல்பட்டு கரூர் மருத்துவமனைகளுக்கு மருத்துவர்களையும், அதிகாரிகளையும், அமைச்சர்களையும் உடனடியாக விரைந்து கரூரில் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறார்.

இந்த இரவிலேயே முதலமைச்சர் அவர்கள் தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டத்தை நடத்திவிட்டு, இரவோடு இரவாக கரூருக்கு விரைந்திருக்கிறார். போர்க்கால நடவடிக்கையாக தமிழக அரசின் அமைச்சர்களையும், அதிகாரிகளையும் செயல்பட அறிவுறுத்தி உள்ளார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படா வண்ணம் அவர்கள் காப்பாற்றப்பட வேண்டும்.

குழந்தைகள், தாய்மார்கள் உட்பட கரூர் கொடுந்துயரில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது கண்ணீர் அஞ்சலியை தெரிவித்துக்கொள்கிறேன்.