வங்கக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 12 பேரை சிங்களக் கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர்களின் மீன்பிடி படகு ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழக மீனவர்கள் மீதான சிங்களக் கடற்படையினரின் தொடர் அத்துமீறல்கள் கண்டிக்கத்தக்கவை. இராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேர் வங்கக்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில் நேற்று முன்நாள் தான் கைது செய்யப்பட்டனர். அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி இன்னும் விலகாத நிலையில் மேலும் 12 மீனவர்களை சிங்களக் கடற்படையினர் கைது செய்திருப்பது இந்தியாவை சீண்டும் செயலாகவே பார்க்கப்பட வேண்டும்.
இந்திய இறையாண்மைக்கு சவால் விடுக்கும் வகையில் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வரும் நிலையில், அதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் எந்தவிதமான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாதது வருத்தமளிக்கிறது.
இந்த சிக்கலுக்கு எப்போது தீர்வு காணப்படுமோ, அப்போது தான் மீனவர்கள் நிம்மதியாக வாழ முடியும்.மீனவர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்து இராமேஸ்வரம் மீனவர்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இன்றும் கூட கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இராமேஸ்வரத்தில் மீனவர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால், மீனவர்களின் உணர்வுகளை மதித்து சிக்கலுக்கு தீர்வு காண எந்த நடவடிக்கைகளையும் அரசுகள் எடுக்கவில்லை. ஒவ்வொரு முறை மீனவர்கள் கைது செய்யப்படும் போதும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது கடமையை முடித்துக் கொள்கிறார்.
தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்குடன் கடந்த மாதம் 29-ஆம் தேதி மீனவர் பிரச்சினைக்கான இந்திய – இலங்கை கூட்டுப் பணிக்குழுவின் கூட்டம் நடைபெற்றது.
அதில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் மீனவர் சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில் இரு நாட்டு மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்கும் பேச்சுகளை விரைந்து நடத்த ஏற்பாடு செய்யும்படி மத்திய அரசு மாநில அரசு வலியுறுத்த வேண்டும். இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நாகை மாவட்ட மீனவர்கள் 12 பேரையும் விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.