சிறையில் அடைத்ததை எதிர்த்து ஜாபர் சாதிக் வழக்கு

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் தன்னை சிறையில் அடைத்ததை எதிர்த்து ஜாபர் சாதிக் தொடர்ந்த வழக்கில், இது தொடர்பாக அமலாக்கத்துறை, திஹார் சிறை நிர்வாகம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போதைப்பொருள் கடத்தல் வழக்கில்கைதாகி திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த திமுக முன்னாள் நிர்வாகியும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக், சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி அமலாக்கத் துறையும் கைது செய்து சிறையில் அடைத்தது.இந்த வழக்கில் அமலாக்கத் துறை தன்னை கைது செய்த 24 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை என்பதால், தன்னை கைது செய்த உத்தரவை ரத்து செய்யக்கோரி ஜாபர் சாதிக் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வு, இது தொடர்பாக அமலாக்கத் துறையும், திஹார் சிறை நிர்வாகமும் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒரு வாரத்துக்கு தள்ளிவைத்துள்ளனர்.