சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டில் இன்றும், நாளையும் (நவ.29, 30) மிக கனமழை முதல் அதி கனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.
வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறாமல், காரைக்கால் – மாமல்லபுரம் இடையே நாளை காலை கரையை கடக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்றும், 7 மாவட்டங்களில் நாளையும் அதி கனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டில் இன்றும், நாளையும் (நவ.29, 30) மிக கனமழை முதல் அதிகனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில், “மேக சுழற்சியைக் காணும்போது மீண்டும் நிலைமை தீவிரமடைவதாகவே தெரிகிறது. காற்றின் வேகம் 30 நாட்ஸ் என்றளவை நெருங்குகிறது. பொதுவாக காற்றின் வேகம் 35 நாட்ஸ் என்றளவில் இருந்தால் அது புயலாக அறிவிக்கப்பட்டு பெயர் வழங்கப்படும். காற்று மேலும் வலுப்பெற்று 40 முதல் 45 நாட்ஸ் என்று வலுப்பெறலாம். காற்றில் சிக்கல் இல்லை. மழையில் தான் சிக்கல்.
கவனிக்கப்பட வேண்டிய அளவில் மேகக்கூட்டங்கள் உருவாகியுள்ளன. மேகக் குவியல்கள் புதிதாக உருவாவதால் மதியம், மாலை, இரவு என படிப்படியாக மழை அதிகரிக்கும். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும், மரக்காணம் கடலோரப் பகுதிகளிலும் இன்று (நவ.29), நாளை (நவ.30) மிக கனமழை முதல் அதிகனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக 30-ம் தேதி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டில் கவனம் தேவை.” எனப் பதிவிட்டுள்ளார்.