சென்னை கால்பந்து திடல்களை தனியாரிடம் ஒப்படைக்க அன்புமணி கடும் எதிர்ப்பு

கால்பந்து திடல்களை தனியாரிடம் ஒப்படைப்பது விளையாட்டு வளர்ச்சியை கடுமையாக பாதிக்கும். எனவே இந்த முடிவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “சென்னையில் சைதாப்பேட்டை, வியாசர்பாடி , திரு விக நகர் உள்ளிட்ட 9 இடங்களில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான செயற்கை புல்தரை கால்பந்து விளையாட்டுத் திடல்கள் தனியாருக்கு ஒப்படைக்கப்படும் என்றும், இனி அங்கு விளையாடச் செல்லும் இளைஞர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு நபருக்கு 120 ரூபாய் வீதம் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

சென்னையில் மக்கள்தொகையுடன் ஒப்பிடும் போது விளையாட்டுத் திடல்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு ஆகும். அவற்றின் எண்ணிக்கையை அதிகரித்து பொதுப் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதன் மூலம் தான் விளையாட்டை வளர்க்க முடியும். விளையாட்டுத் திடல்களை தனியாரிடம் ஒப்படைத்து அங்கு விளையாடுவதற்கு கட்டணம் வசூலிக்கப்பட்டால் ஏழை மாணவர்கள் மற்றும் இளைஞர்களால் விளையாட முடியாது. அது விளையாட்டுகளின் வீழ்ச்சிக்குத் தான் வழிவகுக்கும்.

சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான டென்னிஸ் திடல், பேட்மிண்டன் திடல் , ஸ்கேட்டிங் மைதானம் , டேபிள் டென்னிஸ் மைதானங்கள் போன்றவற்றை தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டு விட்டதால், அங்கு சென்று விளையாடுவோரின் எண்ணிக்கை குறைந்து விட்டது. அதேபோன்ற நிலை கால்பந்துக்கும் ஏற்பட்டு விடக்கூடாது. எனவே, தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டு விட்ட, ஒப்படைக்கப்படவுள்ள அனைத்து விளையாட்டுத் திடல்களையும் சென்னை மாநகராட்சியே மீண்டும் எடுத்து நடத்த வேண்டும்.

அதேபோல், கல்வி, இலக்கியம் சார்ந்த நிகழ்ச்சிகளை ஓரளவு குறைந்த வாடகையில் நடத்துவதற்கு இடமளித்து வந்த தியாகராய நகர் சர்.பிட்டி தியாகராயர் அரங்கம், செனாய் நகர் அம்மா அரங்கம் ஆகியவற்றை தனியாருக்கு குத்தகைக்கு விட சென்னை மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதும் ஆபத்தானது. இந்த அரங்குகள் தனியாரிடம் சென்றால் சாதாரணமான அமைப்புகளால் இனி சென்னையில் நிகழ்ச்சி நடத்த முடியாத நிலை உருவாகி விடும். எனவே, இரு அரங்கங்களையும் தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவையும் மாநகராட்சி திரும்பப் பெற வேண்டும்” என்று கூறியுள்ளார்.