ஜல்லிக்கட்டு போராட்டம் வெற்றிபெற்றதுபோல, கள்ளுக்கான போராட்டமும் நிச்சயம் வெற்றிபெறும் என்று தமிழ்நாடு கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கூறினார்.
கரூரில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: கள் என்பது போதைப் பொருள் அல்ல. நமது உணவின் ஒரு பகுதியாகும். கள் இறக்குவதும், பருகுவதும் அரசியலமைப்புச் சட்டம் மக்களுக்கு கொடுத்திருக்கும் உணவு தேடும் உரிமையாகும். இதையொட்டி, 2025 ஜனவரி 21-ம் தேதி கள் இறக்கி சந்தைப்படுத்துவோம்.
அரசியலமைப்புச் சட்டத்தின்படி கள் இறக்கினால், மதுவிலக்குசட்டப்படி தமிழக அரசு நடவடிக்கை எடுக்கிறது. அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டது மதுவிலக்கு சட்டமா? மதுவிலக்கு சட்டத்துக்கு உட்பட்டது அரசியலமைப்புச் சட்டமா என்பது தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போராட்டம் வெற்றி பெற்றதுபோல, கள்ளுக்கான போராட்டமும் வெற்றி பெறும். நடிகர் விஜய்கட்சி தொடங்கியதில் தவறில்லை.ஆனால், உரிய புரிதலின்றி அரசியலில் இறங்கி ஆட்சியைப் பிடித்தால், நாட்டை கெடுத்ததாக அவப்பெயர்தான் மிஞ்சும். இவ்வாறு நல்லசாமி கூறினார்.