தமிழகத்துக்கு வரவுள்ள புதிய முதலீடுகளால் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்திய தொழில் கூட்டமைப்பின் (சிஐஐ) சார்பில் தமிழகத்தில் தொழில்துறையின் கீழ் குறுந்தொழில் முனைவோரை வலுப்படுத்துவது தொடர்பாக கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடைபெற்றது. கூட்டமைப்பின் மாநில தலைவர் வத்ஸ் ராம் தலைமை தாங்கினார். தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிஐஐயின் ‘புதிய பயணம் வளர்ச்சியை நோக்கி’ எனும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் நிகழ்ச்சியில் பேசியதாவது: ரூ.45 ஆயிரம் கோடிக்கு புதிய முதலீடுகள் தமிழகத்துக்கு வரப்போகின்றன. முதல்வர் மு.க.ஸ்டாலின் நோக்கம் இந்த முதலீடுகளை கொண்டு எத்தனை வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என்பதுதான். அதன்படி இந்த முதலீடுகளின் மூலம்25 ஆயிரம் உயர்தர வேலைவாய்ப்புகள் உருவாக உள்ளன. உணவு, மிண்ணனுவியல், புதுப்பிக்கதக்க ஆற்றல் போன்ற துறைகளில் அதிகமுதலீடுகள் ஈட்டப்பட்டுள்ளன.
மத்திய அரசின் வளர்ச்சி அடைந்த பாரதத்தை நோக்கிய பயணத்துக்கு திராவிட மாடலின் வளர்ச்சி மிகவும் முக்கியம். தமிழக தொழில்முனைவோர்களால் உருவாக்கப்படும் பொருட்கள் இந்தியாவிலே தரமிகுந்து காணப்படுகின்றன. நாம் மாநிலங்களுடன் போட்டிபோடுவதில்லை. நாடுகளுடன் போட்டியிடுகிறோம். இவ்வாறு பேசினார்.