தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் பன்னாட்டு மொழிபெயர்ப்பு நாள் கொண்டாட்டம்: மொழிபெயர்ப்பாளர்களுக்கு பாராட்டு

தமிழ்நாடு பாடநூல் கழகம் சார்பில் பன்னாட்டு மொழிபெயர்ப்பு நாள் சென்னையில் நேற்று கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் பல்வேறு மொழிபெயர்ப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. திசைதோறும் திராவிடம் (தமிழ் இலக்கிய மற்றும் தமிழக வரலாற்று நூல்கள் மொழிபெயர்ப்பு), முத்தமிழறிஞர் மொழிபெயர்ப்பு திட்டம் (மருத்துவ மற்றும் தொழில்நுட்ப நூல்கள் ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்ப்பு), இளந்தளிர் இலக்கிய திட்டம் (குழந்தைகளுக்கான இலக்கியங்களை தமிழ் எழுத்தாளர்களைக் கொண்டு எழுதி வெளியிடுதல் மற்றும் அந்நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தல்), தமிழில் குழந்தைகளுக்கான உலக இலக்கியங்கள் ஆகிய திட்டங்களின்கீழ் கடந்த 3 ஆண்டுகளில் 300-க்கும் மேற்பட்ட நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 30-ம் நாள் பன்னாட்டு மொழிபெயர்ப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் நேற்று நடைபெற்ற மொழிபெயர்ப்பு தின விழாவில் பல்வேறு மொழிபெயர்ப்பாளர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், ‘இந்து தமிழ் திசை’ பதிப்பகம் சார்பில் பேரறிஞர் அண்ணாவை பற்றி வெளியிடப்பட்ட ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த மூத்த பத்திரிகையாளர் விஜயசங்கர், சிறுகதை மொழிபெயர்ப்பாளர் இராமகிருஷ்ணன், மருத்துவர்கள் பாலசுப்பிரமணியன், ரூபஸ்ரீ, செந்தில்குமார், பேராசிரியர் ஃபீரிடா ஞானராணி, முனைவர் தீபப்பிரியா உள்ளிட்டோர் பாராட்டப்பட்டனர். மகப்பேறு மருத்துவர் ஜெயஸ்ரீ தனது மொழிபெயர்ப்பு அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். பாடநூல் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் முனைவர். பொ.சங்கர் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.