திருமாவளவன் தலைமையில் மண்டல வாரியாக செயற்குழு கூட்டம்

விசிக மகளிரணி சார்பில் நடைபெறும் மது மற்றும் போதை ஒழிப்பு மாநாட்டை ஒருங்கிணைப்பது தொடர்பாக கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் மண்டல வாரியாக செயற்குழு கூட்டங்கள் நடத்தப்படவுள்ளன.

இது தொடர்பாக அக்கட்சி நிர்வாகிகள் கூறியதாவது: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வரும் அக். 2-ம் தேதி விசிக மகளிரணி சார்பில் மது மற்றும் போதை ஒழிப்பு மாநாடு நடைபெறவுள்ளது. இதையொட்டி, நிர்வாகிகளுடன் கட்சித் தலைவர் திருமாவளவன் காணொலி வாயிலாக கடந்த 2 நாட்களாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

அப்போது பல அறிவுறுத்தல்களை நிர்வாகிகளுக்கு வழங்கிவருகிறார். அதேநேரம், மாநாட்டை ஒருங்கிணைக்க செப்.10முதல் 6 நாட்கள் திருமாவளவன் சுற்றுப்பயணம் மேற்கொள்ளஇருப்பதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. அந்த திட்டம் தற்போது 8 நாட்களாக மாற்றப்பட்டு, மண்டல வாரியாக செயற்குழு கூட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை (செப்.10) காலை சென்னையில் உள்ள கட்சித் தலைமையகத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்து மாநாடு மற்றும் சுற்றுப்பயணம் தொடர்பாக விளக்குகிறார். அன்றைய தினம் மாலை மரக்காணத்திலும், 11-ம் தேதி காலை கள்ளக்குறிச்சியிலும் கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினரை சந்திக்கிறார்.

இதைத் தொடர்ந்து, செப்.20 வரையிலான 8 நாட்களில் திருமாவளவன் தலைமையில் மண்டல வாரியாக செயற்குழு கூட்டங்கள் நடத்தப்பட்டு, மாநாட்டுக்கான ஒருங்கிணைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.