தொழில் வளர்ச்சியில் சிறந்த மாநிலம் தமிழகம்: மத்திய அரசு புள்ளியியல் ஆய்வை சுட்டிக்காட்டி தமிழக அரசு பெருமிதம்

தமிழகத்தில் 2021-ம் ஆண்டுக்குப் பிறகு 46 புதிய தொழிற்சாலைகள் திறக்கப்பட்டதுடன், 1.39 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தியுள்ளதால், இந்தியாவில் தொழில் வளர்ச்சியில் தமிழகம் தலைசிறந்த மாநிலம் என மத்திய அரசின் புள்ளியியல் துறை ஆய்வு உறுதிப்படுத்தியுள்ளதாக தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி தொடங்கிய பிறகு, 2030-ம் ஆண்டுக்குள் தமிழகத்தை ஒரு டிரில்லியன் பொருளாதார வளர்ச்சி பெற்ற மாநிலமாக்க வேண்டும் என்ற இலக்குடன் தொழில் முதலீட்டாளர் மாநாடுகள் நடத்தப்பட்டு, தொழில் முதலீடுகளை ஈர்க்கும் பணி தொடங்கப்பட்டது.

முதல் கட்டமாக, முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழகம் என்ற பெயரில் சென்னை, கோயம்புத்தூர், தூத்துக்குடி நகரங்களில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டு, ரூ.1.90 லட்சம் கோடிக்கான முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, 2.80 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்ப்புகள் உருவாக்கப்பட்டன. 2-ம் கட்டமாக, ஐக்கிய அரபு நாடுகள், சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான் பயணம் மூலம் ரூ.7,441 கோடி முதலீட்டில், 17,371 பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது.

அதன்பின், 3-ம் கட்டமாக கடந்த ஜனவரி 7, 8-ம் தேதிகளில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், 631 ஒப்பந்தங்கள் மூலம்ரூ.6.64 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டு 26.90 லட்சம் வேலைவாய்ப்புகள் உறுதியாகின. தொடர்ந்து 4-ம் கட்டமாக கடந்த ஜனவரி 24-ம் தேதி ஸ்பெயின் நாட்டுக்கு பயணித்த முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், ரூ.3,440 கோடி முதலீடுகளுக்கு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. அதன்பின், 5-ம் கட்டமாக,முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்க பயணம் மேற்கொண்டு, 19 ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு, 11,516புதிய வேலைவாய்ப்புககள் உருவாக்கப்பட்டுள்ளன.

முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆக.21-ம் தேதி 17,616 கோடிரூபாய் முதலீட்டில் 19 தொழில்சாலைகளை திறந்து வைத்தார்.இவற்றில், 64,968 இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். அதேநாளில் ரூ.51,157 கோடிமுதலீட்டில், 28 புதிய தொழிற்சாலைகளுக்கு அடிக்கல் நாட்டினார். அந்த தொழிற்சாலைகள் வாயிலாக, 41,835 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

இவற்றுடன், முதல்வர் ஸ்டாலின், ரூ.9 ஆயிரம் கோடி முதலீட்டில் 5 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகன உற்பத்தி தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டியுள்ளார்.

2016-21யில் நடந்த ஆட்சியில், ரூ.15,543 கோடி முதலீட்டில் 10,316இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பளித்திடும் 21 தொழிற்சாலைகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு,அதில் 12 தொழிற்சாலைகள்மட்டுமே தொடங்கப்பட்டன. ஆனால், திமுக ஆட்சியில் 3 ஆண்டுகளில் 31 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கத்தக்க வகையில் ரூ.9.74 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு முதலில் 27 புதிய தொழிற்சாலைகள் திறக்கப்பட்டுள்ளன. அத்துடன் மேலும் 19 தொழிற்சாலைகள் ரூ.17,616 கோடி ரூபாய் முதலீட்டில் முதல்வரால் திறக்கப்பட்டுள்ளன. ஆக மொத்தம் 46 புதிய தொழிற்சாலைகள் இதுவரை திறந்து வைக்கப்பட்டுள்ளன. மேலும், பல்வேறு தொழிற்சாலைகள் வந்து கொண்டிருக்கின்றன.

இவற்றின் காரணமாக, திமுக அரசின் தொழில் வளர்ச்சி சாதனைகள் இந்திய அளவில் சிறந்து விளங்குகின்றன. இதை மத்திய அரசின் புள்ளியியல் அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி உறுதிபடுத்தியுள்ளது. மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் 2023-24-ம் ஆண்டுக்கான கள ஆய்வு, கணக்கெடுப்பில் உற்பத்தி தொழில்களில் தமிழகத்தில் 7.5 சதவீத வேலை வாய்ப்புஅதிகரித்துள்ளதாகவும், நாட்டிலேயே அதிக தொழிற்சாலைகள், வேலைவாய்ப்பில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.