நாகபட்டினம் – காங்கேசன்துறை கப்பல் போக்குவரத்து நாளை முதல் மீள ஆரம்பம்

நாகபட்டினத்தில் இருந்து காங்கேசன்துறைக்கான கப்பல் போக்குவரத்து சேவை நாளை வெள்ளிக்கிழமை (16) முதல் ஆரம்பமாகவுள்ளது.

தமிழகத்தின் நாகபட்டினத்திலிருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கான கப்பல் போக்குவரத்து சேவை கடந்த ஆண்டு ஒக்டோபர் 14 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நிலையில், புயல் மற்றும் வட, கிழக்கு பருவமழையைக் காரணங்காட்டி, அச்சேவை ஒக்டோபர் 23 ஆம் திகதி திடீரென இடைநிறுத்தப்பட்டது.

இக்கப்பல் போக்குவரத்து வெகுவிரைவில் மீள ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 10 ஆம் திகதி ‘சிவகங்கை’ பயணிகள் கப்பலின் சோதனை ஓட்டம் நடைபெற்றது. அதற்கமைய அன்றைய தினம் காலை 8 மணியளவில் நாகபட்டினத்திலிருந்து புறப்பட்ட ‘சிவகங்கை’ பயணிகள் கப்பல், அன்று நண்பகல் 12.00 மணியளவில் காங்கேசன்துறையை வந்தடைந்தது.

இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், நாகபட்டினம் முதல் காங்கேசன்துறைக்கான கப்பல் போக்குவரத்து சேவை நாளைய தினத்திலிருந்து மீள ஆரம்பிக்கப்படவிருப்பதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.