நாமக்கல் மாவட்டம் பொன்னேரியில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை விதிக்கக் கோரி நாமக்கல் மாவட்ட ஜல்லிக்கட்டு திருவிழா சங்க உறுப்பினரான கே.வேல்முருகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், “ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக அரசு அறிவித்துள்ள நிலையான வழிகாட்டு முறைகள் முறையாக பின்பற்றப்படுவதில்லை. மதுரை உள்ளிட்ட சில மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக அறிவிக்கப்பட்ட இடத்தில் போட்டிகள் நடைபெறுவதில்லை.
போட்டியாளர்களும், காளைகளின் உரிமையாளர்களும் விதிமுறைகளை மதித்து நடப்பதில்லை. இதனால் ஜல்லிக்கட்டு நிகழ்வை காண வரும் பொதுமக்களுக்கும் பாதுகாப்பற்ற சூழல் உள்ளது. குறிப்பாக நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தாலுகா பொன்னேரியில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் விதிகளை மீறி அறிவிக்கப்படாத இடத்தில் நடைபெறுவதால் இந்தாண்டு போட்டிகளை நடத்தக் கூடாது என தடை விதிக்க வேண்டும்,” என அதில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு விசாரணை விடுமுறை கால சிறப்பு அமர்வில் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி. லட்சுமி நாராயணன் ஆகியோர் முன்பாக நடந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் மற்றும் அரசு வழக்கறிஞர்கள் சாதிக், கார்த்திக் ஆகியோர் ஆஜராகி, ஜல்லிக்கட்டு போட்டிகளின்போது அனைத்து விதிமுறைகளும் முறையாக பின்பற்றப்பட்டு வருகிறது என்றனர்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தமிழர்களின் பாரம்பரிய நிகழ்வான ஜல்லிக்கட்டு விழாவுக்காக அரசு முறையாக அரசாணை பிறப்பித்து, தேவையான எண்ணிக்கையில் போலீஸாரை பணியமர்த்தி வேண்டிய ஏற்பாடுகளை செய்து வருகிறது. இதுபோன்ற ஜல்லிக்கட்டு போட்டிகளின்போது பொதுமக்களின் பாதுகாப்பை அரசே கவனித்துக்கொள்ளும்.
மனுதாரரின் நோக்கம் நாமக்கல் மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளை நிறுத்துவது போல் உள்ளது. இதுபோன்ற விளையாட்டுப் போட்டிகளை விளையாட்டாக மட்டுமே கருத வேண்டும். இந்த வழக்கில் தலையிட முடியாது எனக் கூறி தடை விதிக்க மறுப்பு தெரிவித்து விசாரணையை தள்ளி வைத்தனர்.