மதுரையில் விசிக கொடிக் கம்ப விவகாரத்தில் ஆர்ஐ, விஏஓ உள்பட 3 பேர் பணியிடை நீக்கம்

மதுரையில் விசிக கொடிக் கம்ப அனுமதி விவகாரத்தில் ஆர்ஐ, விஏஓ, கிராம உதவியாளரை மாவட்ட நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்டம், சத்திரபட்டி அருகிலுள்ள வெளிச்சநத்தம் கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், சுமார் 45 அடி கொடி மரம் நடப்பட்டு, அக்கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கொடியை ஏற்றி வைக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு முறையாக அனுமதி பெறவில்லை என கூறி வருவாய்த் துறையினர் ஆட்சேபம் தெரிவித்தனர். இது தொடர்பாக கடந்த 6-ம் தேதி இரவு வருவாய்த் துறையினர், விசிகவினர் இடையே தகராறு ஏற்பட்டது.

விசிகவினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதன்பின், வருவாய்துறையினர் , காவல் துறையினர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருடன் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து சுமார் 45 அடி கொடி மரத்தில் விசிக கட்சி கொடி ஏற்ற வருவாய்த்துறையினர் அனுமதி வழங்கப்பட்டது. இதன்படி, டிச 7-ம் தேதி கொடியேற்று நிகழ்ச்சி நடந்தது. கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கட்சி கொடியை ஏற்றி வைத்தார்.

இதற்கிடையில் வருவாய்த் துறையினர் தாக்கியவர்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்கவேண்டும், வருவாய்த் துறையினர் மீதான ஒழுங்கு நடவடிக்கை கைவிடவேண்டும் என்பதை வலியுறுத்தி வருவாய்த் துறை அலுவலர்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 45 அடி கொடிமரம் நடுவதை தடுக்க தவறியதாகவும், கம்பத்தில் கூடுதல் அடி உயரத்திற்கு அனுமதி மற்றும் உயர் அதிகாரிகளுக்கு முறையாக முன்கூட்டியே தகவல் தெரிவிக்கவில்லை என காரணம் காட்டியும் மதுரை சத்திரபட்டி உட்வட்ட வருவாய் அலுவலர் அனிதா, வெளிச்சநத்தம் கிராம நிர்வாக அலுவலர் (பொறுப்பு) பரமசிவம், காவனூர், வெளிச்சநத்தம் கிராம நிர்வாக உதவியாளர் பழனியாண்டி ஆகிய மூவரையும் பணியிடை நீக்கம் செய்து முறையே கோட்டாட்சியர் சாலினி, வருவாய் அலுவலர் சக்திவேல், தாசில்தார் உத்தரவிட்டனர்.

மதுரை புதூர் பகுதியில் ஏற்கெனவே திருமாவளவன் பிறந்தநாளையொட்டி 62 அடி விசிக கொடி கம்பம் நடுவதில் பிரச்சினை ஏற்பட்டு மாவட்ட ஆட்சியருக்கும் விடுதலை சிறுத்தை கட்சியினருக்கும் இடையே கருத்து மோதல் உருவான போதிலும், வெளிச்சநத்தம் பகுதியிலும் விசிக கொடிக்கம்பம் நடுவதில் வருவாய்த் துறையினருக்கும், விசிகவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் விவகாரத்தில் வருவாய் அலுவலர் உட்பட 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் இது போன்ற நடவடிக்கையை கண்டித்து வருவாய்த் துறை அலுவலர்கள் கூட்டமைப்பினர் தொடர்ந்து போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

3 பேர் சஸ்பெண்ட் குறித்து வருவாய்த் துறையினர் தரப்பில் கூறியது: “பெரும்பாலும், சொந்த இடத்தில் அரசியல் கட்சி கொடிக்கம்பம் நட்டால் அனுமதி கேட்க தேவையில்லை. அரசு அல்லது அரசு புறம்போக்கு பகுதியில் கட்சி கொடிக்கம்பம் நட்டு, கொடியேற்ற முறையே வருவாய்த்துறை, காவல்துறையில் முன்அனுமதி பெறவேண்டும். வருவாய்துறை அனுமதி கொடுத்தாலும், அவ்விடத்தில் கட்சி கொடி கம்பத்தால் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் சூழல் இருந்தால் காவல்துறை தரக்கூடாது என்பது விதிமுறை. அதுவும் அக்கம், பக்கத்தில் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில், குறிப்பிட்ட உயரத்தில் மட்டும் கட்சி கொடிக்கம்பங்கள் அனுமதிக்கப்படும்.

மதுரை வெளிச்சநத்தம் பகுதியில் அரசு புறம்போக்கு இடத்தில் விசிக கொடிக்கம்பம் அனுமதியின்றி நடவு செய்ய ஏற்பாடு செய்தனர். இதை அறிந்து அப்பகுதி விஏஒ பரமசிவம் சம்பந்தப்பட்ட தாசில்தாருக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்துவிட்டு ஆட்சேபம் தெரிவித்து இருக்கிறார். அப்போது,விசிகவுக்கும், விஏஓவுக்கும் ஏற்பட்ட தகராறில் விஏஓ தாக்கப்பட்டிருக்கிறார். போலீஸார் முன்னிலையில் இச்சம்பவம் நடந்திருக்கிறது.

பாதிக்கப்பட்ட விஏஓ சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் வாங்க மறுத்தனர். ஆனாலும், விசிக கொடிக்கம்பம் நடுவதை முன்கூட்டியே தடுக்கவில்லை என, கூறி 3 வருவாய்துறையினர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். அரசியல் கட்சியினர் பயன் அடைதல் போன்ற என்ன பிரச்சினையாக இருந்தாலும், நாங்களே பாதிக்கப்படுகிறோம், பலிகடாவாகிறோம். எங்கள் மீதான இது போன்ற நடவடிக்கை தடுக்கப்பட வேண்டும். இதை கண்டித்து போராட்டம் நடத்தப்படும். இது தொடர்பாக மதுரை வருவாய்த்துறை அலுவலர்கள் கூட்டமைப்பு கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்” என்றனர்.