வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்புகளை வழங்கிய முன்னாள் நீதிபதி எம்.எஸ்.ஜனார்த்தனம் மறைவு: தலைவர்கள் இரங்கல்

சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி எம்.எஸ்.ஜனார்த்தனம் (89) நேற்று காலமானார். அவருக்கு காவல்துறை மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு நடைபெறவுள்ளது.

கடந்த 1988 முதல் 1998-ம் ஆண்டு வரை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்தவர் எம்.எஸ்.ஜனார்த்தனம். தனது பதவிக் காலத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க பல தீர்ப்புகளை அளித்திருந்தார். பின்னர், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், மாநில நுகர்வோர் ஆணையம் ஆகியவற்றின் தலைவராக பதவி வகித்துள்ளார். தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராக 2006-ம் ஆண்டில் நியமிக்கப்பட்ட இவர், 2015-ம் ஆண்டு வரை அப்பொறுப்பில் நீடித்தார்.

அவரது பரிந்துரையின் அடிப்படையில்தான் தமிழகத்தில் இஸ்லாமியர்கள் இட ஒதுக்கீடு, கிறிஸ்தவர்கள் இட ஒதுக்கீடு, அருந்ததியர் இட ஒதுக்கீடு ஆகியவை நடைமுறைப்படுத்தப்பட்டன. இத்தகைய பல்வேறு சிறப்புமிக்க பரிந்துரை மற்றும் தீர்ப்புகளை வழங்கிய எம்.எஸ்.ஜனார்த்தனம், செஞ்சியில் உள்ள தனது மகள் வீட்டில் வசித்து வந்தார். வயது மூப்பு காரணமாக அவர் நேற்று அதிகாலை காலமானார்.

இதையடுத்து, அவரது உடல் சென்னை திருவான்மியூரில் உள்ள மகன் வீட்டுக்கு எடுத்து வரப்பட்டது. அவரது உடலுக்கு தமிழக அரசு சார்பில் சுற்றுலாத்துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன், அஞ்சலி செலுத்தினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, சென்னை பெசன்ட் நகரில் உள்ள மின்மயானத்தில் எம்.எஸ்.ஜனார்த்தனம் உடலுக்கு இன்று காலை காவல்துறை மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறுகிறது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவராக இருந்தபோது, பிற்படுத்தப்பட்டோருக்கான தமிழக அரசின் இடஒதுக்கீட்டை உறுதி செய்வதற்கான அறிக்கையை தயாரித்து அளித்தவர் நீதிபதி எம்.எஸ்.ஜனார்த்தனம். சமூகநீதி வரலாற்றில் தமது முத்திரையை மிகவும் ஆழமாக பதித்தவர். நீதித்துறையின் மாண்பையும், சீரிய மரபையும் காத்துவந்தவர். அவரது மறைவு நீதித்துறைக்கு மட்டுமின்றி, சமூகநீதி கருத்தியல் தளத்தில் இயங்கும் அனைவருக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்’ என தெரிவித்துள்ளார்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, பாமக தலைவர் அன்புமணி, மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர் த.செல்லகண்ணு உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.