நம்முடைய மொழியையும், கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் மறந்துவிடக் கூடாது என்று அயலகத் தமிழர்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.
அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில் “தமிழால் இணைவோம் – தரணியில் உயர்வோம்” என்ற தலைப்பில் 2 நாள் நடைபெறும் அயலகத் தமிழர் தினம்-2026 விழா சென்னையில் நேற்று தொடங்கியது.
இணையவழியில் நடத்திய பேச்சு, ஒப்புவித்தல், மாறுவேடம், கதை சொல்லுதல் போட்டிகளில் வெற்றி பெற்ற 15 பேருக்கு சான்றிதழ், காசோலைகளை துணை முதல்வர்உதயநிதி வழங்கினார்.
தொடர்ந்து, விழா மலரை வெளியிட அமைச்சர் துரைமுருகன் பெற்றுக் கொண்டார். தமிழக அரசின் சார்பில், ரூ.10 லட்சம் மதிப்பிலான இசைக் கருவிகளை மொரீஷியஸ் நாட்டுக்கு பிரதிநிதி மலையப்பனிடம் உதயநிதி வழங்கினார்.
பின்னர் உதயநிதி பேசியதாவது: தமிழ் நம் அனைவரையும் இணைக்க கூடிய மொழி. தமிழ் என்கிற அடையாளத்துக்கு முன்னால், வேறு எந்த அடையாளமும் நிற்க முடியாது. எல்லா பேதங்களையும் தாண்டி நம் அனைவரையும் இணைத்திருப்பது நம்முடைய தாய் மொழித்தமிழ்.
அப்படி நாம் அனைவரும் தமிழால் இணைந்ததால்தான், இன்றைக்கு தரணியை வென்று கொண்டிருக்கிறோம். அயலகத் தமிழர்களுக்கு அரசு தந்த அடையாள அட்டைதான் உங்களுடைய தாய்வீட்டு அடையாளம்.



