வெள்ளைக்கார ஏகாதிபத்தியத்தோடு போரிட்டு இழந்த ராஜ்ஜியத்தை மீட்ட ஒரே ராணி வேலுநாச்சியார்தான்: நீதிபதி சுரேஷ்குமார் புகழாரம்

சுதந்திர வரலாற்றில் ஒரு பெண்ணாக இருந்து, வெள்ளைக்கார ஏகாதிபத்தியத்தோடு போரிட்டு, இழந்த ராஜ்ஜியத்தை மீட்ட ஒரே ராணி வேலுநாச்சியார்தான் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ரா.சுரேஷ்குமார் தெரிவித்தார்.

புலவர் புதுகை வெற்றிவேலன் எழுதிய ‘வேலுநாச்சியார் காவியம்’ என்ற நூல் அறிமுக விழா மதுரை நான்காம் தமிழ்ச் சங்கத்தில் நேற்று நடைபெற்றது.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ரா.சுரேஷ்குமார் தலைமை வகித்து நூலை வெளியிட நான்காம் தமிழ்ச் சங்கத் தலைவர் கே.பி.எம்.நாகேந்திர சேதுபதி பெற்றுக் கொண்டார்.

விழாவில் நீதிபதி ரா.சுரேஷ்குமார் பேசியதாவது: சுதந்திர வரலாற்றில் ஒரு பெண்ணாக இருந்து, வெள்ளைக்கார ஏகாதிபத்தியத்தோடு போரிட்டு, இழந்த ராஜ்ஜியத்தை மீட்ட ஒரே ராணி வேலுநாச்சியார்தான். இந்த வரலாற்றை இளைஞர்களுக்கு எடுத்துச் சொல்லும் பணியை எழுத்தாளர்கள், கவிஞர்கள் செய்ய வேண்டும்.

பாண்டிய மன்னர்கள், சோழ மன்னர்களுக்குப் பின் பல நூறு ஆண்டுகள் தமிழகத்தை ஆட்சி செய்தவர்கள் சேது மன்னர்கள். அத்தகையோரின் வாரிசுகளில் ஒருவர் கவுரி நாச்சியார். மற்றொருவர் வேலு நாச்சியார்.

வீரமங்கை வேலுநாச்சியார் காவியம் நூல் வெளியீட்டு விழா சென்னையில் 25.02.2024-ல் நடந்தபோது தமிழக அரசுக்கு ஒரு கோரிக்கை வைத்தேன். அந்த கோரிக்கையை ஏற்று தமிழக அரசு சென்னை கிண்டியில் ரூ. 50 லட்சம் செலவில் வேலுநாச்சியார் சிலை அமைக்கப்படும் என அறிவித்துள்ளது. அதற்காக அரசை நன்றியோடுபாராட்டுகிறேன்.

மதுரையிலிருந்து தமிழக அரசக்கு மேலும் 2 கோரிக்கைகளை முன்வைக்கிறேன். தமிழுக்கு தஞ்சையில் பல்கலைக்கழகம் இருப்பதுபோல், மதுரையில் தனித்தமிழ் வளர்க்கும் கல்லூரியாக செந்தமிழ்க் கல்லூரிஇன்று 100 ஆண்டுகளை கடந்து சேவையாற்றி வருகிறது.

நான்காம் தமிழ்ச்சங்கம் 14.09.2025-ல் 125 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. அன்றிலிருந்து 14.09.2026 வரை ஓராண்டு முழுவதும் நான்காம் தமிழ்ச் சங்க கொண்டாட்டங்களை தமிழக அரசு ஏற்று நடத்த வேண்டும்.

சுவாமி விவேகானந்தர் பாம்பனில் வந்து இறங்கியபோது சேதுபதி மன்னர் வரவேற்ற இடத்தில் நினைவுத் தூண் அமைத்ததாகவும், தற்போது அது இல்லை என்பதாகவும் சொல்வது வேதனைக்குரியது. குந்துகால் பகுதிஎன்ற இடத்தில் மன்னர் பாஸ்கரசேதுபதி, சுவாமி விவேகானந்தரின் நினைவைப் போற்றும் வகையில் நினைவுச் சின்னத்தை தமிழக அரசு நிறுவ வேண்டும். இந்த 2 கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் மூத்த வழக்கறிஞர் சொ.அருள்வடிவேல் என்ற சேகர் வரவேற்றார். நூலாசிரியர் புலவர் புதுகை வெற்றிவேலன் ஏற்புரை வழங்கினார். கூடுதல் காவல்துறை இயக்குநர் வே.வனிதா உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். நான்காம் தமிழ்ச்சங்க செயலாளர் ச.மாரியப்ப முரளி மற்றும் தமிழறிஞர்கள், கவிஞர்கள் கலந்து கொண்டனர். செந்தமிழ்க் கல்லூரி முதல்வர் ஜெ.போ.சாந்திதேவி நன்றி கூறினார்.