அண்ணாமலை மீது வழக்கு தொடர ஆளுநர் ஒப்புதல்: அரசாணை வெளியீடு

தமிழக பொதுத்துறை செயலாளர் நந்தகுமார் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:-சேலம் மாவட்ட ஆளுநரிடம் பியூஷ் என்பவர் புகார் ஒன்றை அளித்திருந்தார்.

அதில், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மீதும், யூடியூப் சேனல் ஒன்றைச் சேர்ந்த ராஜவேல் நடராஜன் என்பவர் மீதும் இந்திய தண்டனை சட்டப்பிரிவுகள் 153, 153ஏ, 505 (இருவேறு சமுதாயங்களுக்கு இடையே மத ரீதியான வெறுப்பை உருவாக்குவது) மற்றும் 120பி (சதித்திட்டம்) ஆகியவற்றின் கீழ் வழக்கு தொடர அனுமதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இதுகுறித்து மாநில குற்றவியல் தலைமை வக்கீலின் சட்ட ரீதியான கருத்தை அரசு கேட்டது. அவர், அண்ணாமலை பேசிய பேச்சில், குறிப்பிட்ட மதத்துக்கு எதிராக வெறுப்பை ஏற்படுத்தும் உள்நோக்கம் இருக்கிறது.மத்திய அரசு-ஷகின் அப்துல்லா ஆகியோருக்கு இடையேயான வழக்கு ஒன்றில் சுப்ரீம் கோர்ட்டு, ‘வெறுப்பை உருவாக்கும் வகையில் பேசி, அது இந்திய தண்டனை சட்டத்தின் 153ஏ, 153பி, 295ஏ, 505 ஆகியவற்றின் கீழ் வருவதாக இருந்தால், யாருமே புகார் செய்யாத நிலையிலும்கூட மாநில அரசு தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்யலாம். குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’ என்று கூறியுள்ளது என்று கருத்து தெரிவித்தார்.

மாநில குற்றவியல் தலைமை வக்கீலின் சட்ட ரீதியான கருத்தை கவனமாக பரிசீலித்ததில், அண்ணாமலை பேசிய பேச்சு, வெவ்வேறு மதத்தினருக்கு இடையே கசப்பையும், வெறுப்பையும், பகையையும், ஒருமைப்பாடு சீர்குலைவையும் ஏற்படுத்தும் உள்நோக்கம் கொண்டுள்ளதாக கூறப்படுவதில் அரசு திருப்தி அடைகிறது.மேலும் அந்த பேச்சுக்காக இந்திய தண்டனை சட்டத்தின் 153ஏ மற்றும் 505 ஆகிய பிரிவின் கீழ் அண்ணாமலை மீது வழக்கு தொடரலாம் என்று அரசு திருப்தி அடைகிறது.

எனவே அந்த சட்டப்பிரிவுகளின் கீழ் அண்ணாமலை மீது வழக்கு தொடரவும், சம்பந்தப்பட்ட கோர்ட்டு குற்ற முகாந்திரத்தை ஏற்கலாம் என்றும் குற்ற விசாரணைமுறைச் சட்டத்தின் 196-ம் பிரிவின் கீழ் தமிழக கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.